லண்டனைத் தளமாகக் கொண்டு இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி வரும் சர்வாக் ரிப்போர்ட் இப்போது 1எம்டிபி தொடர்பான மேலும் ஒரு முக்கிய ஆவணத்தை வெளிட்டிருப்பதாகக் கூறிக் கொள்கிறது.
அது பேங்க் நெகாரா துணை ஆளுனர் எழுதிய இரண்டாவது கடிதம் என்று அது கூறிக்கொண்டது.
பேங்க் நெகாராவிலிருந்து பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வுக்கு அனுப்பப்பட்ட கடிதமாம் அது.
அது மார்ச் 23-இல் அனுப்பப்பட்ட கடிதம் என்றும் ஏற்கனவே ஏப்ரல் 9-இல் மத்திய வங்கி பிஏசிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது என்றும் அதைத் தான் ஏற்கனவே அம்பலப்படுத்தி இருப்பதாகவும் சரவாக் ரிப்போர்ட் கூறிற்று.
முதல் கடிதம் வால் ஸ்திரிட் ஜர்னல் ஏட்டிலும் வெளியிடப்பட்டிருந்தது. அதில், சர்ச்சைக்குரிய தொழில்முனைவர் ஜோ லாவ்தான் குட் ஸ்டார் லிமிடெட்டின் ஏக உரிமையாளர் என்பதும் அவருக்குத்தான் 1எம்டிபி- இலிருந்து யுஎஸ்$1.03 பில்லியன் சென்றிருக்கிறது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாம்.
இன்று சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டிருக்கும் இரண்டாவது கடிதமும்
நிதி மாற்றப்பட்ட விதம் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. சரவாக் ரிப்போர்ட் கூறுவதெல்லாம் உண்மைதானா என்பதை மலேசியாகினியால் உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. சட்டச் சிக்கல் வரும் என்பதால் கடிதத்தில் அடங்கியுள்ள விவரங்களை வெளியிடவும் முடியவில்லை.