1எம்டிபி தணிக்கை அறிக்கை சூழ்ந்துள்ள இரகசியம் வெளிவர ஆட்சியாளர் மன்றமே நமது கடைசி நம்பிக்கை

kamarul1எம்டிபி மீதான தேசிய கணக்காய்வரின் தணிக்கையை சுற்றியிருக்கும் இரகசியத்தை வெளிக்கொணர ஆட்சியாளர்களின் மன்றம் தலையிட வேண்டும். அதுதான் மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை.

கோலதிரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா காமாருல் பாரின் ஷா ராஜா அஹமட் இவ்வாறு கூறுகிறார், ஏனென்றால் அனைத்து அரசாங்க அமைப்புகளையும் கீழறுப்பு செய்து அரசாங்கம் முழுமையான அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளது.

“அதிகாரப்பூர்வமான இரகசியச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம், குற்றத் தடுப்புச் சட்டம் மற்றும் தேசநிந்தணைச் சட்டம் போன்ற பல சட்டங்களின் கீழ் சாதாரண மக்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் குரல்கள் நீண்ட காலமாக கீழடைக்கிவைக்கப்பட்டுள்ளது.

“தமது கடமைகளைச் செய்ய முயன்ற சட்டத்துறை தலைவர், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணயத்தின் தலைவர் மற்றும் சிறப்பு இரகசியப் பிரிவின் அதிகாரிகள் ஆகியோரும் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

“நீதிபரிலானத்துறையும் இப்போது மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.

“நமக்கு எஞ்சி இருப்பது ஆட்சியாளர்களின் மன்றம்தான். அவர்களின் அதிகாரமும்கூட தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது.

“நாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு முழுமையான அதிகாரம் வழங்க அனுமதித்துள்ளோம் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை”, என்று பார்டி அமனா நெகாரா நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா கமாருல் கூறினார்.

நேற்று பல எதிர்க்கட்சி தலைவர்கள் 1எம்டிபி மீதான கணக்காய்வரின் அறிக்கை ஒஎஸ்எ சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருப்பதை அகற்றுவதற்கு ஆட்சியாளர்கள் அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதற்கு முன்பு ஆட்சியாளர்கள் 1எம்டிபி விவகாரம் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், துரதிருஷ்வசமாக அரசாங்கம் அக்கோரிக்கைக்கு மதிப்பு அளிக்கவில்லை என்று கூறிய ராஜா கமருல், பிரதமர் நஜிப் கடந்த இரண்டு ஆட்சியாளர்கள் மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்.

1எம்டிபி விவகாரத்தில் மலாய் ஆட்சியாளர்களை சந்திப்பதை நஜிப் தவிர்க்க முயல்கிறாரா என்று அவர் வினவினார்.

சரவாக் ரிபோர்ட் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த அவதூறுக்காக அதன் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரவுனை மீது அரசாங்கம் ஏன் வழக்குத் தொடரவில்லை என்று அவர் மேலும் வினவினார்.

அந்த ஆசிரியர் தம் மீது வழக்குத் தொடருமாறு மலேசிய அரசாங்கத்திற்கு சவால் விட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் நஜிப் அரசாங்கத்தின் போக்கு மிகவும் விநோதமாக இருக்கிறது என்றாரவர்.