தண்டிக்கப்பட வேண்டியவர்கள் டோல் நிறுவனங்கள் ; சாலைப் பயனர்கள் அல்ல

tollஅரசாங்கம்  அவசரத்   தடங்களைப்  பயன்படுத்தும்     சாலைப்  பயனர்களைத்   தண்டிப்பதற்குப்  பதிலாக      நெடுஞ்சாலைகளில்     போக்குவரத்து  நெரிசலைத்     தவிர்க்கத்  தவறிய  சாலைப்  பராமரிப்பு   நிறுவனங்களைத்தான்  தண்டிக்க   வேண்டும்    என்கிறார்   பாஸ்   துணைத்   தலைவர்    துவான்   இப்ராகிம்   துவான்  மான்.

அவசரத்   தடங்கள்   அவசர  வேளைகளில்   பயன்படுத்துவதற்காக   மட்டுமே       என்பதை  ஒப்புக்கொண்ட    துவான்  இப்ராகிம்,  போக்குவரத்து  நெரிசலுக்குத்    தீர்வு  காணாமலிருப்பதற்குப்   பொறுப்பு    சாலைப்  பராமரிப்பு   நிறுவங்கள்தான்  என்றார்.

இவ்வாண்டு   அவசரத்   தடங்களைத்   தவறாகப்   பயன்படுத்துவோர்மீது    கவனம்    செலுத்தப்படுகிறது.

“பிரதமர்கூட  முகநூலில்   இவ்விவகாரம்  குறித்துக்   கருத்துரைத்துள்ளார்”,  என  துவான்  இப்ராகிம்   இன்று    வெளியிட்டிருந்த    அறிக்கையில்  கூறினார்.

அவசரத்    தடங்களைப்   பயன்படுத்துவோரைத்    தண்டிப்பதால்   மட்டும்  இப்பிரச்னைக்குத்   தீர்வு  கண்டு   விட  முடியாது  என்றாரவர்.

போக்குவரத்து  நெரிசல்  ஏற்படுவதற்கான   மூல  காரணத்தைக்  கண்டறியாமல்   சாலைப்  பயனர்களுக்கு  அபராதம்  விதிப்பது    நியாயமாகாது .  எதனால்  விழாக்  காலங்களிலும்   விடுமுறை   நாள்களிலும்    சாலைப்  பயனர்கள்     அவசரத்     தடங்களைப்    பயன்படுத்த    வேண்டிய   கட்டாய  நிலைக்கு  ஆளாகிறார்கள்    என்பதைக்   கண்டறிய      வேண்டும்.

“போக்குவரத்து  நெரிசலுக்குத்   தீர்வு   காணத்  தவறும்    சாலைப்  பராமரிப்பு  நிறுவங்களுக்குத்தான்   அபராதம்   விதிக்க  வேண்டும் ”   ,என்று  கூறிய   துவான்   இப்ராகிம்    அப்பிரச்னைக்குத்   தீர்வு   காணத்  தவறும்   நிறுவனங்களின்  சலுகைகளை  இரத்துச்   செய்ய   வேண்டும்  என்றார்.