தம்மிடம் ஒன்பது ஆடம்பரக் கார்கள் இருப்பதாகக் கூறப்படுவதை வன்மையாக மறுக்கும் பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடின் அது தீய நோக்கில் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டு என்று சாடினார்.
தாம் பயன்படுத்தும் கார்களில் ஒன்று ஒரு “சீன தவக்கே”-யுடையது அல்லது தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுவதும் அப்பட்டமான பொய் என்றார்.
“பொறுப்பற்ற அரசியல் நோக்கம்கொண்ட இக்குற்றச்சாட்டுகளைக் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வழக்குரைஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்”, என சுரைடா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
சுரைடா எட்டு ஆடம்பரக் கார்களையும் ஒரு மோட்டார் சைக்கிளையும் வைத்திருப்பதாக ஜூன் 20-இல் முகநூல் பயனர் ‘ரபி அவ்க் கிச்சிக்’ தன் முகநூல் பக்கத்தில் கூறி இருந்தார். கார்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டிருந்தார்.
கார்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் ஒரு “சீன நிறுவனத்தின்” பெயரில் பதிவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறிக்கொண்டார்.