சிறைக்கைதிகள் அவர்களின் குடும்பத்தாரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதில் தவறில்லை என்று உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட் கூறியதில் “பரிவில்லை, மனிதாபிமானம் இல்லை” என பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரன் சாடினார்.
“கைதிகளுக்குச் சுதந்திரம் இல்லை” என்பதால் அவர்கள் தங்கள் குடும்பத்தாரைத் தொட்டுப்பேசக்கூடாது என்று நூர் ஜஸ்லான் நேற்றுக் கூறி இருந்தார்.
“அவரின் கூற்று தங்கள் அன்புக்குரியவர்களைத் தொடுவதற்குத் துடியாய்த் துடிக்கும் ஆயிரக்கணக்கான கைதிகளின் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்திருக்கும்.
“அது கொடூரமான, பொறுப்பற்ற பேச்சு. கொஞ்சம்கூட பரிவில்லை, மனிதாபிமானம் இல்லை”, என சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
நூர் ஜஸ்லான் “சட்டம் அறியாமல்” பேசுகிறார் என்றாரவர்.
“1995 சிறைச்சாலைச் சட்டத்தில் அல்லது கூட்டரசு அரசமைப்பில் சிறைக்கைதிகள் எல்லாச் சுதந்திரத்தையும் இழந்து விடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நூர் ஜஸ்லானால் சுட்டிக்காட்ட முடியுமா? முடியாது, ஏனென்றால் அப்படி எதுவும் கிடையாது”, என்று சுரேந்திரன் கூறினார்.
சுரேந்திரன் முன்னாள் எதிரணித் தலைவரான அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர்களில் ஒருவர்.
நமது நாட்டில் பெரும்பாலன அமைச்சர்கள் நினைத்ததை பேசுகிறார்களே தவிர பேசுவதற்கு முன் சிந்திப்பதே இல்லை ! அதலால்தான் இத்தகைய அவலமான பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கிறது.
மனிதாபிமானமா ? அதெல்லாம் மலேசியாவில் செத்து பல காலம் ஆகிவிட்ட்து.