பயங்கரவாத-எதிர்ப்புத் தலைவருக்கு ஐஎஸ் கொலை மிரட்டல்

isமலேசியாவில்  பயங்கரவாத- எதிர்ப்புப்  படையின்   தலைவரான  ஆயுப்  கானுக்கு   இஸ்லாமிய  பயங்கரவாத   அமைப்பான  ஐஎஸ்   கொலை   மிரட்டல்   விடுத்துள்ளது.

புக்கிட்  அமானிலிருந்த   ஆயுப்  கானை   தொலைபேசியில்  தொடர்புகொண்டு  ஐஎஸ்  பயங்கரவாத  அமைப்பைச்   சேர்ந்த   முகம்மட்   வாண்டி   முகம்மட்  ஜெடி    கொலை  மிரட்டலை   விடுத்தார்  என  த  ஸ்டார்   ஆன்லைன்   தெரிவித்துள்ளது.

ஆயுப்   பயங்கரவாதத்தை  எதிர்ப்பதில்   காட்டும்   தீவிரத்துக்காகவும்  மே  மாதம்    முகம்மட்   வாண்டியின்    அண்ணனைத்   தடுத்து  வைத்ததற்காவும்    அவரைக்  கொல்லப்போவதாக  மிரட்டியிருக்கிறார்கள்  என்று    கூறப்படுகிறது.

அந்த  வகையில்  ஐஎஸ்  கொலைப்  பட்டியலில்    இப்போது  ஆயுப்பும்  இடம்பெற்று  விட்டார். போலீஸ்  படைத்   தலைவர்   காலிட்   அபு  பக்கார்  உள்பட  பல  மலேசியத்   தலைவர்களின்   பெயர்கள்  அப்பட்டியலில்  உள்ளன.

அரசாங்க    அமைப்புகள் சமய  வரம்புகளை   மீறி  நடப்பவை  என்று  கூறிக்கொள்ளும்  ஐஎஸ்,      அவற்றை  முக்கிய  இலக்குகளாகக்   குறி  வைத்திருக்கிறது  என   ஆயுப்   கூறினார்.

“அதற்கு   நாங்கள்  ஆதரவாக   இருக்கிறோம்  என்று  கருதுவதால்    எங்களை  முதலிலும்    அதன்  பின்னர்  முஸ்லிம்- அல்லாதாரையும்   தாக்குவது   அவர்களின்  திட்டமாகும்”,  என்றாரவர்.

ஆனால்,  இந்தக்  கொலை  மிரட்டலுக்கெல்லாம்   அஞ்சப்   போவதில்லை   என்று  கூறிய   ஆயுப்    நாட்டில்   பயங்கரவாதிகளை  எதிர்த்துத்   தொடர்ந்து   போராடப்போவதாக  சூளுரைத்தார்.