தொழிலாளர் தற்கொலைக்கு முயற்சி: தோட்ட நிறுவனம் சம்பளத்தைக் கொடுக்க முன்வந்தது

workerகடந்த  வாரம்   தோட்ட  நிறுவனமொன்று    அந்நிய   தொழிலாளர்  ஒருவர்   தற்கொலை   செய்துகொள்ள   முயன்றதை    அடுத்து    அவருக்குரிய   சம்பளத்தைக்   கொடுக்க    ஒப்புக்கொண்டது.

“இன்னமும்  கொடுக்கப்படாமலிருக்கும்   சம்பளத்தையும்   மன உளைச்சலை  ஏற்படுத்தியதற்காக   ஒரு   இழப்பீட்டையும்   வழங்க  ஒப்புக்கொண்டார்கள்”,  என  பிஎஸ்எம்   துணைத்   தலைவர்  எம்.சரஸ்வதி    கூறினார்.

பிஎஸ்எம்   சம்பளப்  பாக்கி  பற்றியும்   ஒப்பந்தமீறல்  பற்றியும்    தொழிலாளர்களுக்கு  எதிரான   வன்முறைகள்   பற்றியும்   திங்கள்கிழமை   போலீசில்  புகார்   செய்திருந்தது.

“இன்று  பிஎஸ்எம்-முடன்   பேச்சு   நடத்தினோம்.  இவ்விவகாரம்   பற்றி  மேலோட்டமாக   விளக்கினோம்.  நாங்கள்  தொழிலாளர்  நலன்மீது   அக்கறை  கொண்டுள்ளதை   பிஎஸ்எம்  இப்போது  புரிந்து  கொண்டிருக்கிறது.  நாங்கள்  கொடுத்த  விளக்கத்தையும்   அது  ஏற்றுக்கொண்டது”, என  யுனைடெட்   பிளாண்டேசன்ஸ்   தலைமை   நிர்வாகி   சி. மேத்தியூ   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

நிறுவனத்தின்  பிரதிநிதிகள்   சிலிம்  ரிவர்   மருத்துவமனையில்   சிகிச்சை  பெற்றுவரும்   இந்திய  நாட்டைச்  சேர்ந்த  தொழிலாளரைச்  சென்று   பார்த்ததாகவும்   மேத்தியூ  கூறினார்.

“இதன்  தொடர்பில்   பிஎஸ்எம்   போலீஸ்  புகாரை   மீட்டுக்  கொள்ளும்”   என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

ஆனால்,  புகார்  மீட்டுக்கொள்ளப்படும்  என்பதை   சரஸ்வதி   மறுத்தார்.

“யுனைடெட்   பிளாண்டேசன்   இந்த   விவகாரத்தில்    தீவிர  கவனம்   செலுத்துவதை   ஒப்புக்கொள்கிறோம்.  ஆனால்,  அச்சந்திப்பில்   போலீஸ்  புகார்  பற்றியோ    அதை   மீட்டுக்கொள்வது   பற்றியோ   விவாதிக்கப்படவில்லை”,  என்றார்.

தொழிலாளர்   பி.கண்ணன்   சம்பளம்   மற்றும்  அலவன்ஸ்  கொடுக்கப்படாததால்    ஜூன்   7-இல்   தூக்குப்   போட்டுக்கொள்ள  முனைந்தார்.

கண்ணன்  2012-இல்  மலேசியாவுக்கு   வந்ததிலிருந்து  சிலிம்  ரிவரில்(எஸ்கேசி 15)   வேலை  செய்து   வருகிறார்.

ஒரு  நிரந்தர  தொழிலாளராக  இருந்து   மூன்றாண்டுகளுக்கு   ரிம900  மாதச்  சம்பளம்  பெற்று   வந்தார்.  பின்னர்  2015-இல்   அவர்  ஒப்பந்தத்   தொழிலாளராக்கப்பட்டு   செம்பனைப்  பழங்கள்    சேகரிக்கும்  வேலை  கொடுக்கப்பட்டது.

2015  ஜூனில்   அவருக்கு  உரிய   சம்பளம்   கொடுக்கப்படவில்லை  என்று   அவர்  சொன்னார்.

ஆகஸ்டில்   அவருடைய  ஒப்பந்தம்   முடிவுக்கு  வருகிறது.  அது  புதுப்பிக்கப்படாது  என்று   மூன்று   மாதங்களுக்கு   முன்பே   தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பந்தப்படி     நிறுவனம்   மாதந்தோறும்  ரிம285   உணவு  அலவன்ஸ்   வழங்க   வேண்டும்.

ஆனால்,  கண்ணன்   தனக்கு  உணவு  அலவன்ஸ்  கொடுக்கப்படவில்லை  என்றும்   ஜூன்  மாதம்   ரிம  535  மட்டுமே  கொடுக்கப்பட்டது  என்றும்  கூறினார்.