உண்மையான எதிரி யார் என்பதை துவான் இப்ராகிம் முதலில் அடையாளம் காட்ட வேண்டும்

yusufஎதிரணியினரிடையே  போர் ஒய்வு   தேவை  என்று    பாஸ்   துணைத்   தலைவர்    விடுத்த     அழைப்பு  காலம்தாழ்த்தி  வந்திருந்தாலும்   அது  வரவேற்கத்தக்கதே    என்று  கூறிய   பாஸின்   கடும்  வைரியான   பார்டி   அமனா  நெகாரா   முதலில்   அக்கட்சி   அதன்    உண்மையான   எதிரி   யார்   என்பதை   அடையாளம்   காண    வேண்டும்   என்று  கூறிற்று.

அண்மையில்    சிலாங்கூர்,     சுங்கை   புசாரிலும்    பேராக்,  கோலா  கங்சாரிலும்   நடந்த    இரட்டை     இடைத்  தேர்தல்களின்போது    பாஸ்  பக்கத்தான்  ஹராப்பானைத்தான்   வெளிப்படையாகத்   தாக்கியது   என்று   அமனா    உதவித்   தலைவர்   முஜாஹிட்   யூசுப்   ராவா   கூறினார்.

அதனுடன்   பேச்சுக்கள்  நடத்தியதும்கூட   பாஸ்   போட்டியிடுவதில்   முனைப்பு   காட்டி  அங்கு    மும்முனைப்   போட்டிக்கு   வழிகோலியது  என  அந்த   பாரிட்    புந்தார்  எம்பி    சொன்னார்.

“எதிரணியின்   முயற்சிகளைக்  கெடுத்ததே   பாஸ்தான்”,  என்று  முஜாஹிட்   மலேசியாகினியிடம்     தெரிவித்தார்.

துவான்  இப்ராஹிமின்   போர் ஓய்வு  அழைப்புப்  பற்றிக்   கருத்துரைத்த    முஜாஹிட்,  “இது    துவான்   இப்ராகிமின்   கருத்தா   அல்லது    அக்கட்சியின்   நிலைப்பாடா  என்பது     உறுதியாக   தெரியவில்லை,   ஏனென்றால்,  அவர்   ஒன்று  சொல்வதும்   அதை   அவரின்   போஸ் (பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்)   உடனே  மறுப்பதும்   பலமுறை   நடந்துள்ளது”,  என்றார்.

நேற்று  போர் ஒய்வுக்கு    அழைப்பு   விடுத்த    துவான்   இப்ராகிம்   எதிரணியினர்   தங்களுக்குள்   அடித்துக்   கொள்வதை  நிறுத்தி    தங்கள் பீரங்கிகளை    அம்னோ- பிஎன்னை  நோக்கித்   திருப்ப  வேண்டும்   என்று  கேட்டுக்கொண்டார்.