பிஎஸ்எம்: முன்னாள் சர்வாதிகாரியுடன் கூட்டணி இல்லை

 

psmnoமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அறிவித்திருக்கும் பெரும் கூட்டணியில் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) இணையாது.

பிஎஸ்எம் குடிமக்கள் பிரகடனத்தை எதிர்க்கிறது. அதனுடன் முன்னாள் சர்வாதிகாரி வழிநடத்தும் எந்த கூட்டணியையும் எதிர்க்கிறது என்று பிஎஸ்எம்மின் தலைமைச் செயலாளர் எ. சிவராஜன் மலேசியாகினியிடம் கூறினார்.

மகாதிர் அறிவித்திருக்கும் பெரும் கூட்டணி பாரிசான் நேசனலை எதிர்க்கும் அனைத்து சக்திகளுக்கும், பிஎஸ்எம் உட்பட, ஒரு மேடையாக அமையும் என்று பாக்கத்தான் ஹரப்பான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய சிவராஜன் இவ்வாறு கூறினர்.

இதற்கு மாற்றாக, பிஎன் கொள்கைகளுக்கு மாறான, தெளிவான கொள்கைகளைக் கொண்ட சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட்ட ஒரு கூட்டணியை அமைப்பது சிறந்த தேர்வாகும் என்றாரவர்.

“இல்லை என்றால், எந்த அடிப்படையில் அவர்கள் அம்னோ ஆட்சிக்கு எதிராகப் பரப்புரை செய்வர்? மலேசியா இன்று ஒரு தோல்வி கண்ட நாடாக இருப்பதற்கு காரணமான மகாதிருடன் கூட்டு சேர முடியும்?

“புதிய மாற்றாக வரக்கூடிய ஒன்று புதியதோர் அரசியலை முன்வைக்க வேண்டும், ‘ரோஜாக்’ (கலப்பு) தலைவர்களை அல்ல”, என்று அவர் மேலும் கூறினார்.