டாக்டர் மகாதீரின் புதிய கட்சி பதிவுக்கு அரசாங்கம் தடையாக இருக்கக் கூடாது

 

Dr-Xavier-Jeyakumarமுன்னாள் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தனது முன்னாள்  அம்னோ சகாக்களுடன் சேர்ந்து புதிய கட்சி அமைப்பதற்குத் தடையாக எவ்வகையிலும் மலேசிய அரசாங்கம் இருக்கக்கூடாது என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

மலேசியா ஒரு  ஜனநாயக நாடு. இங்குக் கட்சி அமைத்து அந்தக் கட்சியின் கொள்கையை  விளக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்வதும், பின்பு அந்தக் கொள்கையை மக்கள் ஏற்று கொண்டனரா இல்லையா என்று தீர்மானிக்க அக்கட்சியைப் பிரதிநிதித்து வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதும், தேர்தலில் அந்தக் கொள்கைக்கு மக்களின்  அமோக ஆதரவு இருந்தால், அக்கட்சி  ஆட்சியமைத்து அதன் கொள்கையைச் சட்டப்படி நாட்டில்  அமல்படுத்துவது எல்லாம் ஜனநாயக நடைமுறைகளாகும்.

 

அந்த ஜனநாயக நடைமுறைக்கு  எந்தக் குந்தகமுமின்றி அரசாங்கம் செயல்படவேண்டியது மிக அவசியம். சங்கங்களின் பதிவகம் உள்துறை அமைச்சின் கட்டுப் பாட்டில் இருக்கிறது என்ற மமதையில், எதையும் தடுக்கலாம் என்று கட்சிகளின் பதிவைத் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

மக்கள் தொகையில் சிறிய எண்ணிக்கையைக் கொண்ட இந்தியர்கள் கூட பற்பல  பிரிவாகப் பிரிந்து கட்சிகள்  அமைத்துக் கொள்ள அனுமதிக்கும் அரசாங்கம் மலாய் சமுதாயத்தில் இன்னொருஅரசியல் கட்சி உருவாவதைத் தடுக்க வேண்டிய  அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

பாரிசான் நேசனல் பங்காளி கட்சிகள் சில  மலேசியாவின் இக்கட்டான நிலையை  உணராமல்  இருக்கலாம். ஆனால் நாட்டு மக்கள், நாட்டின் தற்போதைய அவல நிலையை நன்றாக உணர்ந்து விட்டனர்.

 

நாடு 1எம்டிபி விவகாரத்தில் சிக்கியிருப்பதால் நாட்டின் சொத்துகளை  அன்னியர்களிடம்  தாரை வார்க்க, விற்க வேண்டிய இக்கட்டில் இருப்பதுடன். மக்கள் மிகக் கடுமையான பாதுகாப்பு மிரட்டல்களைத் தாங்கள்  எதிர்கொண்டுள்ளதை உணர்ந்துள்ளனர். ஆக, இன்றைய அரசு, எதிர்கால மலேசியர்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி, மக்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும்கூட எந்த உத்தரவாதமும் வழங்க முடியாத இக்கட்டில்  இருப்பதை நாட்டின் நிலைமைகள் நிரூபித்து வருகின்றன.

 

மக்கள் நாட்டு நலனைக் கருதி, தங்கள் குடும்பம் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துச் சுதந்திரமாக முடிவு எடுக்க அவர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட  சுதந்திரத்தின் ஒரு  அங்கமே கட்சி அமைப்பதும், அரசியலமைப்பு சட்டத்திற்கு உரிய ரீதியில்  கொள்கைகளை வகுத்துச் செயல்படுவதுமாகும்.

 

நாட்டில் இப்பொழுது செயல்படும் கட்சிகள் எதுவும் தங்களின்  விருப்பங்களை சரியாக பிரதி நிதிக்கவில்லை என்று மக்கள் கருதும் பட்சத்தில், அவர்கள் புதிய கட்சிக்கு ஆதரவு  தருவதைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழி வகுக்காது  என்பதால் முன்னாள் மலேசியப் பிரதமர்  டாக்டர் மகாதீர் முகமது தனது முன்னாள்  அம்னோ சகாக்களுடன் சேர்ந்து அமைக்கும் கட்சிக்கு விரைந்து  அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று  அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.