கூட்டரசுப் பிரதேச பக்கத்தான் ஹராபான் எம்பிகள் கோலாலும்பூரின் வர்த்தக மையப் பகுதியில் வாகன நிறுத்தக் க்ட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசிசை இன்று சந்தித்தனர்.
செராஸ் எம்பி டான் கொக் வாய், வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கூட்டரசுப் பிரதேச அறக்கட்டளை (யயாசான் விலாயா பெர்செக்குதுவான்)யிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன் என்று வினவினார். அந்த யயாசானுக்குக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர்தான் தலைவர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அறக்கட்டளைதான் புதிய கட்டணங்களைப் பரிந்துரைத்ததாகவும் கோலாலும்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) ‘வேறுவழியின்றி’ அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று என்றும் தெரிகிறது”, என்று அவர் மெனாரா டிபிகேஎல்-இல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டண உயர்வு,, அந்த அறக்கட்டளைக்கு ‘பணம்கறக்கும் பசு’ போன்றது என டிஏபி இடைக்கால தேசியத் தலைவர் கூறினார்.
“அறக்கட்டளைக்கு வாகன நிறுத்திமிடங்களை நிர்வகிப்பதில் அனுபவம் போதாது”, என்று குறிப்பிட்ட டான், விரைவிலேயே அப்பொறுப்பு அம்னோ- தொடர்புடைய ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்படலாம் என்றார்.
கட்டண உயர்வை நிறுத்தி வைக்குமாறு ஹராபான் எம்பிகள் மேயரைக் கேட்டுக்கொண்டதாக லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கூறினார்.