போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாக சஞ்சீவன் முறையீடு

sanjகுற்றச்செயல்   தடுப்புச்   சட்ட(பொகா)த்தின்கீழ்   தடுத்து   வைக்கப்பட்டுள்ள    மலேசிய  குற்றச்செயல்   கண்காணிப்பு   அமைப்பான   மைவாட்ச்-இன்   தலைவர்   ஆர்.ஸ்ரீசஞ்சீவன்,  போலீஸ்  காவலில்     சித்திரவதைக்கு   ஆளானதாகக்   கூறிக்  கொள்கிறார்.

அது  பற்றி    போலீசுக்குத்    தெரியாது    என்று   கூறிய    கோலாலும்பூர்   போலீஸ்   தலைவர்   அமர்  சிங்    அதன்   தொடர்பில்    சஞ்சீவன்     போலீசில்   புகார்   செய்தால்   விசாரணை    செய்யப்படும்   என்றார்.

சஞ்சீவன்   இன்று   சிரம்பான்    நீதிமன்றத்துக்குக்   கொண்டு  செல்லப்பட்டு    அவர்மீது   இரண்டு    குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டதாகவும்     அப்போதுதான்   அவர்    சித்திரவதை   செய்யப்பட்ட   விவகாரத்தைக்    கூறியதாகவும்      சஞ்சீவனின்   தலைமை   வழக்குரைஞர்    கோபிந்த்   சிங்  டியோ    கூறினார்.

“கைகளுக்கு  விலங்கிடப்பட்டு   கண்கள்  கட்டப்பட்டு    அடிக்கப்பட்டதாக    அவர் (சஞ்சீவன்)   கூறினார்.  இன்று  பூராவும்   அவருக்கு   உணவு  கொடுக்கப்படவில்லை,  மருந்தும்   கொடுக்கப்படவில்லை.  உடலுக்குள்  இரத்தக்  கசிவுக்கு   மருத்துவ சிகிச்சை   தேவை   என்ற    அவரது   கோரிக்கையும்   புறக்கணிக்கப்பட்டது.

“அதனால்   அவரை  மருத்துவ   சோதனைக்கு  அனுப்புமாறு   போலீசைப்  பணிக்க    வேண்டும்,  அதுவும்   இன்றே    செய்ய   வேண்டும்   என்று   கேட்டுக்கொள்ளும்   ஒரு  மனுவைத்   தாக்கல்   செய்தேன்.

“நீதிபதி   பாதியா   இட்ரிஸ்,   அது  உண்மையா  என்று   சஞ்சீவனிடம்  கேட்க   அவரும்  உண்மையே   என்று   நீதிமன்றத்தில்    கூறினார்.   அதனை  அடுத்து    தேவையானதைச்   செய்யுமாறு   விசாரணை   அதிகாரிக்கு   நீதிபதி    உத்தரவிட்டார்”,  என  கோபிந்த்   சிங்   கூறினார்.