1எம்டிபி விவகாரங்கள் அம்பலமாகியுள்ளதை அடுத்து நஜிப் விடுப்பில் செல்வதே முறையாகும், அசிசா வலியுறுத்து

revelஅமெரிக்க   நீதித்துறை   வெளிப்படுத்தியுள்ள   அதிர்ச்சி  தரத்தக்க   தகவல்களை    அடுத்து   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்   விடுப்பில்  செல்ல   வேண்டும்  என  மலேசிய    மக்கள்     விரும்புவதாக  எதிரணித்   தலைவர்     டாக்டர்   வான்    அசிசா   வான்   இஸ்மாயில்   கூறினார்.

நஜிப்,   பிரதமராக    இருப்பதால்   அவருடைய    பதவி  முக்கிய    அரசுத்துறைகளை-   சட்டத்துறைத்   தலைவர்   அலுவலகம்,    போலீஸ்,    மலேசிய   ஊழல்-தடுப்பு    ஆணையம்   போன்றவற்றை-  கட்டுப்படுத்தவும்   விருப்பம்போல்   ஆட்டி  வைக்கவும்    இடமளிக்கிறது   என்றாரவர்.

“இந்த   விவகாரத்துக்குப்   பிரதமருடன்   அணுக்கமான    தொடர்பு     உண்டு   என்பதால்      நஜிப்   விடுப்பில்   செல்வதையே   மலேசியர்கள்     விரும்புவதாக    நான்   நம்புகிறேன்.    இந்த    முக்கியமான   விவகாரத்தில்    முழுமையான,   வெளிப்படையான   விசாரணை   நடப்பதைத்   தடுக்க   அதிகாரம்   தவறாகப்   பயன்படுத்தப்பட்டது   என்ற  எண்ணம்   ஏற்படாதிருக்க   அவர்  அவ்வாறு   செய்ய   வேண்டும்”,  என  அசிசா  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

1எம்டிபி-இலிருந்து   கையாடப்பட்ட   பணத்தைச்    சலவை   செய்யும்   முயற்சியில்  ஈடுபட்ட   அனைத்துலகக்  கும்பல்   ஒன்றுக்குச்   சொந்தமான   ரிம4பில்லியன்  மதிப்புள்ள   சொத்துக்களை   அமெரிக்க  அரசாங்கம்    பறிமுதல்   செய்திருப்பதாக   யுஎஸ்  நீதித்துறை   நேற்றிரவு   அறிவித்ததைக்   கேட்டு   உலகமே   அதிர்ச்சி   அடைந்தது    என    வான்  அசிசா   குறிப்பிட்டார்.