தேர்தல் சீரமைப்புக்குப் போராடிவரும் அமைப்பான பெர்சே, 1எம்டிபி தொடர்பில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை அடுத்து பேரணி நடத்துவது பற்றி விவாதித்து வருவதாக அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார்.
1எம்டிபி-இல் கையாடப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடர்ந்திருப்பதை அடுத்து பேரணி நடத்தும் திட்டம் உண்டா என்று கேட்கப்பட்டதற்கு மரியா இவ்வாறு பதிலளித்தார்.
இன்னொரு பேரணிக்கு இது சரியான நேரம்தான் என்று குறிப்பிட்ட அவர், பெர்சே அது பற்றி விவாதித்து வருவதாகக் கூறினார்.
“எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்குமுன் என்ஜிஓ-களுடன் கலந்து பேச வேண்டியுள்ளது”, என்றாரவர்.
பேரணியில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் சேர்த்துக் கொள்வீர்களா என்று வினவியதற்கு, அவர் தாராளமாக சேர்ந்து கொள்ளலாம் என்றார்.
“எங்கள் சீரமைப்புத் திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் எங்கள் பேரணியில் சேர்ந்து கொள்ளலாம்”, என்று மரியா கூறினார்.
நேற்று, மகாதிர் மலேசியரள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகக் கோரி அமைதிப் பேரணி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.