rafiziramli.com வலைப்பதிவைப் புலனாய்வு செய்த மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய(எம்சிஎம்சி)த்தின் அதிகாரி அந்த வலைத்தளத்தின் நடத்துனர் யார் என்பதைத் தன்னால் அடையாளம் காண முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
பாண்டான் எம்பி முகம்மட் ரபிசி ரம்லிக்கு எதிரான வழக்கில் இன்று சாட்சியமளித்த எம்சிஎம்சி துணை இயக்குனர் முகம்மட் ஸமிரி சனிம் ,35, குறுக்கு -விசாரணையின்போது அவ்வாறு கூறினார்.
ரபிசியின் தலைமை வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ அவரைக் குறுக்கு- விசாரணை செய்தார்.
கோபிந்த்: அந்த வலைப்பதிவின் நடத்துனர் யார் என்பதைத் தீர்மானிக்க உங்களால் முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
ஸமிரி: ஒப்புக்கொள்கிறேன்.
கோபிந்த்: அந்த வலைப்பதிவில் என்ன பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
ஸமிரி: இல்லை. ஒப்புக்கொள்ளமாட்டேன்.
கோபிந்த்: அந்தப் பதிவைப் பதிவேற்றம் செய்தவர் யார் என்பதை உங்களால் தீர்மானிக்க முடியவில்லை என்கிறேன்.
ஸமிரி: ஒப்புக்கொள்கிறேன்.
மீண்டும் விசாரிக்கப்பட்டபோது, அவ்வலைப்பதிவில் ரபிசி-இன் பெயரும் படங்களும் இருந்ததை அவர் வலியுறுத்தினார்.
இதற்குமுன் ஜூன் 30ஆம் நாள் விசாரணையின்போதும் ஸமிரி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், அதிகாரத்துவ இரகசியச் சட்டத்துக்கு(ஓஎஸ்ஏ) உட்பட்ட தலைமைக் கணக்காய்வாளரின் 1எம்டிபி அறிக்கையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்த ரபிசியின் வலைப்பதிவைப் புலனாய்வு செய்யுமாறு போலீசால் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
அந்த வலைப்பதிவையும் மற்ற விவரங்களையும் ஆராய்ந்ததில் அது ரபிசிக்குச் சொந்தமான வலைப்பதிவு என்ற முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார்.
ரபிசி, 1எம்டிபி அறிக்கையை அனுமதியின்றி வெளியிட்டார் என ஓஎஸ்ஏ பிரிவு 8(1)(சி) (iii) மற்றும் 8(1)(சி)(iv)-இன்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்