முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம், டாக்டர் மகாதிர் முன்மொழிந்துள்ள புதிய எதிர்கட்சியில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள் என்று சிலவற்றைக் கோடிகாட்டியுள்ளார்.
அக்கட்சி மலாய்க்காரர்களையும் பூமிபுத்ராக்களையும் கொண்ட கட்சியாக இருக்கும், முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அதன் தலைவராக இருப்பார். தலைவராக இருப்பதால் அவர் எதிரணியின் பிரதமராக நியமிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்றாரவர்.
“இந்நாட்டில் ஒரு கட்சி ஒரே இனத்தவரைக் கொண்டிருக்கலாம். ஆனால், இனவாதம் கொண்டிருக்கக் கூடாது, குறுகிய எண்ணம் கொண்டதாக இருக்கக் கூடாது, அதன் நடவடிக்கைகளில் தீவிரவாதம் இருக்கக் கூடாது.
“நமக்குத் தேவை அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய முற்போக்கான ஒரு மலாய்க்காரர் கட்சி”, என்று ஜைட் அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எதிரணியின் பிரதமர் வேட்பாளராக என்ற முறையில் முகைதினால் பக்கத்தான் ஹராபானில் இப்போது வெறுமையாக உள்ள தலைமை இடத்தை நிரப்ப முடியும்.
இப்போதைக்கு எதிரணியில் அனைதுக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு தலைவர் இல்லை என்றாரவர்.
அவை நினைக்கின்றன எதிரணியை ஒன்றிணைக்கும் வலிமை தங்களுக்கு இருப்பதாக.
“ஆனால், அப்படி அல்ல”, என்று கூறிய ஜைட் பினாங்கில் திடீர் தேர்தல் நடத்தும் திட்டம் மீது டிஏபியும் பிகேஆரும் சர்ச்சையிட்டுக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.