அமைச்சர் ஜமில் கீர் National Oversight Whistleblower(NOW ) அமைப்பின் இயக்குனர் அக்மால் நஸ்ருல்லா முகம்மட் நசிருக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அனாதைகளுக்கும் ஏழை மக்களுக்குமான பணத்தை அமைச்சர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று அக்மால் நசிர் கூறியிருந்ததற்காக அவர்மீது ஜமில் கீர் அந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.
அக்மால் நசிரின் குறைகூறலில் பிரதமர்துறை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டிருக்க ஜமில் கீர் தனிப்பட்ட முறையில் வழக்கைத் தொடுத்திருந்ததுதான் அது தள்ளுபடி செய்யப்படுவதற்கான காரணமாகும்.
வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி நோர் பீ அரிப்பின், பகாங் மந்திரி புசார் vs உத்துசான் மலேசியா வழக்கில் முறையீட்டு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.
அக்மால் நசிர் அமைச்சர் என்ற முறையில் ஜமில் கீரைக் குறைகூறியிருக்க அவரோ தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுத்திருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டியதாக அக்மாலின் வழக்குரைஞர் ரஸ்லான் ஹட்ரி சுல்கிப்ளி கூறினார்.
ஓர் அமைச்சர் அரசு ஊழியர் என்ற முறையில் அவருக்கு எதிராகக் கூறப்படும் கூறைகூறல்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது.
வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம் செலவுத் தொகை ரிம3,000 கொடுக்கவும் உத்தரவிட்டது என ரஸ்லான் தெரிவித்தார்.