அமெரிக்க நீதித்துறை (டிஒஜி) 1எம்டிபி சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து இருப்பதால் யாங்-டி-பெர்த்துவான் அகோங்கும் ஆட்சியாளர்கள் மாநாடும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட பேராசிரியர் அசிஸ் பாரி வேண்டுகோள் விடுத்ததற்காக அவர் தற்போது விசாரிக்கப்படுகிறார்.
அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வந்த போது அவரது குடும்பத்தினரும் அவரோடு வந்திருந்தனர்.
அவருக்கு எதிராக போலீஸ் புகார் இரண்டு தினங்களுக்கு முன்புதான் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார். தாம் அதிகாலையிலேயே வந்து விட்டதாக கூறிய அவர், தாம் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் மற்றவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றார்.
சட்டத்திற்கேற்ப தேவைப்படுபவைகளுக்கு பதில் கூறப்போவதகாவும் போலீசார் அவர்களது வேலையை தொழிலியல்படி செய்கிறார்கள் என்றும் அதே போல் மற்றவர்களும், புகார் செய்தவர்கள் உட்பட, இந்த தொழிலியல் மனப்பாங்கை பின்பற்ற வேண்டும் என்றும் அசிஸ் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் 1எம்டிபி பற்றி போலீஸ் புகார் செய்ய சென்ற போது அசிஸ் அவருடன் இருந்தார். அதன் பின்னர், ஆட்சியாளர்கள் 1எம்டிபி பற்றி நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற அவரது அறிக்கை வெளியிடப்பட்டது.
நஜிப் ரசாக் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்காக குடிமக்கள் தெருப் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு மக்கள் சாய்க்கக்கூடும் என்று அசிஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அது குறித்து விளக்கம் அளித்த அசிஸ், தாம் வன்செயலுக்கோ மக்கள் தெருப் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்றோ வேண்டுகோள் விடவில்லை என்றார்.
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் ஏமாற்றமடைவார்கள், மக்கள் சினமடைவார்கள். சில சமயங்களில் அவ்வாறான நிலையில் எதுவும் நடக்கலாம் என்று கூறியதாக அவர் விளக்கம் அளித்தார்.