1எம்டிபி குறித்து டான்ஸ்ரீ மூவரும் பொய்யான தகவல் கொடுத்தார்கள் என்பது அம்னோ இளைஞர் துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹருனுக்கு எப்படித் தெரியும் என்று வினவுகிறார் கோலா திரெங்கானு எம்பி ராஜா கமருல் பஹ்ரின் ராஜா அஹ்மட் ஷா. 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கைதான் அதிகாரத்துவ இரகசியச் சட்ட(ஓஎஸ்எ)த்தின்கீழ் பாதுகாக்கப்படும் ஒரு ஆவணம் ஆயிற்றே என்றாரவர்.
முன்னாள் பேங்க் நெகாரா ஆளுனர் ஸெட்டி அக்டார் அசீஸ், மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) முன்னாள் தலைவர் அபு காசிம் முகம்மட், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் ஆகிய மூவர்மீதும் கைருல் கூறும் குற்றச்சாட்டு கடுமையானது, அது பல கேள்விகளை எழுப்புகிறது என ராஜா பாஹ்ரின் குறிப்பிட்டார்.
“ஒரு எம்பி என்ற முறையிலும் சாதாரண குடிமகன் என்ற முறையிலும் நான் கேட்பது இதுதான், அமெரிக்காவிடம் கொடுக்கப்பட்டது பொய்யான அறிக்கை என்றால் அசலான, உண்மையான அறிக்கை எது?
“இரண்டையும் பார்த்தால்தான் அவற்றை ஒப்பிட்டு எது மெய் எது பொய் என்பதைத் தீர்மானிக்க முடியும்.
“பிரச்னை என்னவென்றால் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை ஓஎஸ்ஏ-இன்கீழ் இரகசியமாக பாதுகாக்கப்படும் ஒரு ஆவணம்.
“நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள்கூட தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கையைப் பார்க்க அனுமதி கிடையாது.
“அப்படி இருக்க அம்னோ இளைஞர் துணைத் தலைவரால் மட்டும் எது உண்மையானது, எது பொய்யானது என்பதை எப்படி நிரூபிக்கப் போகிறார்?”, என ராஜா பாஹ்ரின் இன்று ஓர் அறிக்கையில் வினவினார்.