மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)த்தின் புதிய தலைவர் ரசாலி இஸ்மாயில் பெர்சே குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் ஏமாற்றமளிப்பதாக தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அவ்வமைப்பு கூறுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேலி செய்வதையும் பெர்சே தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்துவதையும் விடுத்து, சுஹாகாம் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாராட்டி இருக்க வேண்டும், அமைதிப் பேரணி நடத்தும் அவர்களின் அரசமைப்பு உரிமைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
ரசாலி, அரசமைப்பிலேயே மலேசியர்கள் அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள அடிப்படை உரிமை வழங்கப்பட்டிருப்பதைப் பாதுகாக்காமல், இலட்சக் கணக்கில் திரண்டுவந்து பெர்சே பேரணிகளில் கலந்து கொண்டவர்களைக் குறை சொல்வதைக் கண்டு மனமுடைந்து போனதாக பெர்சே ஓர் அறிக்கையில் கூறிற்று.
“மலேசியாவில் அமைதிப் பேரணி நடத்தும் உரிமை உள்பட மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அதிகாரம் சுஹாகாமுக்கு உண்டு என்பதை ரசாலிக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்”, என்று அது கூறியது.

























