‘ஐஎஸ் மிரட்டல்’ கடிதத்தில் நஜிப், ஜாஹிட் படங்கள்

isநெகிரி   செம்பிலான்   போலீஸ்   நிலையத்துக்கு   வந்த    “IS Ancaman”(ஐஎஸ்  மிரட்டல்)   என்று  எழுதப்பட்டிருந்த   ஒரு  கடிதத்தில்    பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்,   துணைப்   பிரதமர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடி    ஆகியோரின்   படங்கள்   இருந்ததாக   ஒரு  நாளேடு   கூறுகிறது.

இரண்டு  பக்கங்கள்  கொண்ட   அக்கடிதம்   நீலாய்   போலீஸ்   தலைவருக்கு   அனுப்பப்பட்டிருந்தது.  அதில்   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்  போலீஸ்,   சட்டத்துறைத்   தலைவர்   முகம்மட்   அபாண்டி   அலி,   மியான்மார்  அரசாங்க   ஆலோசகர்   ஆங்    சான்   சூ  குய்    ஆகியோரின்  படங்களும்கூட   இருந்ததாக   சைனா  பிரஸ்   தெரிவித்தது.

அக்கடிதத்தில்  “கோலா  பிலாவில்  316  உறுப்பினர்கள்   நான்கு  நிபுணர்கள்”,   நீலாயில்   114   உறுப்பினர்கள்    எட்டு   நிபுணர்கள்,   போர்ட்  டிக்சனில்   97  உறுப்பினர்கள்    இரு  நிபுணர்கள்”     இருக்கிறார்கள்   என்று   குறிப்பிடப்பட்டிருந்தது.

அது   நெகிரி  செம்பிலானில்   உள்ள  ஐஎஸ்   உறுப்பினர்  எண்ணிக்கை  பற்றிய   குறிப்பா என்பது    தெரியவில்லை.   புள்ளிவிவரங்கள்  மூலமாக   ஐஎஸ்   அதன்   “ஆள்பலத்தைக் காண்பிக்க” முயல்கிறது  என   அச்செய்தி   அறிக்கை   கூறியது.

நிபுணர்கள்  என்று  அது   யாரைக்  குறிப்பிடுகிறது   என்பதும்   தெரியவில்லை.

இதனிடையே,  அவ்விவகாரத்தை   பயங்கரவாத- எதிர்ப்புச்   சிறப்புப்  பிரிவு   விசாரணை    செய்து   வருவதாக   அதன்   உதவி   இயக்குனர்   ஆயுப்  கான்  மைடின்  பிச்சையை    மேற்கோள்காட்டி  சைனா   பிரஸ்   அறிவித்துள்ளது.