அரசாங்கம் அது வகுத்த எரிபொருள் கொள்கையை அதுவே மீறுவதாக பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி குற்றம் சாட்டினார்.
உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் எரிபொருளில் மறைமுக வரிகள் இருப்பது தமக்குத் தெரியாது என்றும் எரிபொருள் சில்லறை விலை மாதாந்திர சராசரியை அடிப்படையாகக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும் நேற்று கூறியது பற்றிக் கருத்துரைத்தபோது ரபிசி அவ்வாறு கூறினார்.
பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் விலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுவதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும் விற்பனை விலை உண்மையான விலையைவிட உயர்வாகவே உள்ளது என அந்த எதிரணி எம்பி கூறினார். இந்த விலை வேறுபாட்டுக்குக் காரணம் மறைமுக வரிதான் என்றாரவர்.
மாதாந்திர சராசரியின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத எண்ணெய் விலை லிட்டருக்கு ரிம1.65 என்றுதான் இருக்க வேண்டும். அமைச்சு நிர்ணயித்திருப்பதுபோல் ரிம1.75 என்று இருக்கக் கூடாது.
“ஒவ்வொரு லிட்டருக்கும் பயனீட்டாளர்கள் கொடுக்கும் 10 சென் என்பது லிட்டருக்கு 10 சென் வரி கொடுக்கப்படுவதற்கு ஒப்பாகும். இதைத்தான் மறைமுக வரி என்கிறேன்”, என ரபிசி ஓர் அறிக்கையில் கூறினார்.
மறைமுக வரி எதுவும் இல்லை என்பதை மக்கள் நம்ப வேண்டுமானால் அரசாங்கம் எதன் அடிப்படையில் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்கிறது என்பதை ஹம்சா வெளியிட வேண்டும் என்று ரபிசி வலியுறுத்தினார்.