எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 3,266 பட்டதாரிகளில் 1,520 பட்டதாரிகள் இந்தியர்கள் – பேராசிரியர் இரவிச்சந்திரன்

aimst-universityகடந்த சில நாட்களில், வாட்ஸ்அப் புலனம் மற்றும் ஓன்லைன் செய்தி தளம் வழியாக கெடா மாநிலத்தில் அமைந்துள்ள எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்படும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, குறிப்பாக பல் மருத்துவத்துறையில், குறித்து கடுமையான விமர்சனத்துடன் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

சமீபத்தில், பல் மருத்துவத்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மொத்தம் 75 மாணவர்களில் மூவர் மட்டுமே இந்தியர்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது என்று ஒரு கேள்வி.

மற்ற இந்திய நிறுவனங்களுக்கு ஏற்பட்டது போல எய்ம்ஸ்டையும் மஇகா தாரைவார்க்கிறதா? இப்பல்கலைக்கழகத்தின் உண்மையான உரிமையாளர் யார் – மஇகாவா அல்லது வேறு தனிப்பட்டவர்களா? கல்விக் கழகங்களை தோற்றுவிப்பதற்காக ஏழை இந்தியர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் என்னவாயிற்று?

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் மைக்கா ஹோல்டிங்ஸ் சென்ற அதே அவல வழியில் செல்கின்றதா? இவ்வாறான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், இந்தியர்களின் நலன்களுக்கு பொறுப்பானவர்கள் எய்ம்ட்ஸில் போதுமான இந்திய மாணவர்கள் சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய முடியவில்லை என்றால், எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இந்திய மாணவர்களுக்கானது என்று நாடகமாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்துவதற்கு அவர்களிடம் பணம் இல்லை என்ற அடிப்படையில் இந்திய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதை எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் நிறுத்திவிடும் என்றும் ஆருடம் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விளக்கமும் பதிலும் அளிக்குமாறு செம்பருத்தியின்

arumugam_suaram_new02கா. ஆறுமுகம் நேற்று (ஆகஸ்ட் 4) காலை மணி 6 அளவில் எய்ம்ஸ்ட் பல்கலைகழகத்திற்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் கேட்டுக்கொண்டார்.

அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் பிற்பகல் மணி 3 அளவில் அவரது விளக்கத்தையும் பதிலையும் அனுப்பியுள்ளார்.

தரத்தை சீர்தூக்கிப் பார்த்து மாணவர்களின் கனவை நிறைவேற்றும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் 4 நட்சத்திர தகுதி பெற்றது என்றும், 2015 ஆண்டு வரையில் அப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 3,266 பட்டதாரிகளில் 1,520 பட்டதாரிகள் இந்தியர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த 1,520 இந்திய பட்டதாரிகளில்: 717 டாக்டர்கள் (Doctors),  62 பல் மருத்துவர்கள் (Dentists), 143 மருந்து தயாரித்து கொடுப்பவர்கள் (Pharmacists), 310 உயிரியல் தொழில்நுட்ப நிபுணர்கள் (Biotechnologists), 69 தாதிமார்கள் (Nurses), 44 உடற்பயிற்சி மருத்துவர்கள்  (Physiotherapists), 56 பொறியாளர்கள் (Engineers), 53 வணிகத்துறை பட்டதாரிகள் (Business graduates) மற்றும் 66 இதர டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பிற்கு பிந்திய படிப்பை மேற்கொண்டவர்கள் (other Diploma and Postgraduates) என்ற விபரத்தை எய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியும் துணை வேந்தருமான பேராசிரியர் எம். இரவிச்சந்திரன் அவரது பதிலில் கூறியுள்ளார்.

குற்றச்சாடுகள் சரியானதல்ல

Prof Raviமிக அதிகமாக விரும்பப்படும் துறைகளான மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருந்து தயாரித்தல் ஆகியவற்றுக்கான மாணவர்கள் சேர்த்தல் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது; முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இத்துறைகளில் சேர்வதற்கு மனுக்கள்  தாக்கல்   செய்யப்படுவதற்கான இறுதி நாள் செப்டெம்பர் 13, 2016 ஆகும். ஆகவே, அண்மையில் ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் சரியானதல்ல என்று பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2016 ஆம் ஆண்டில் தாதியர் தொழில் டிப்ளோமாவுக்கு படிக்கும் இந்திய மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முழு உபகாரச்சம்பளம் வழங்கியிருப்பதோடு படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உபகாரச்சம்பளம் டியூசன் கட்டணம், அடிப்படைக் கட்டணம், தங்குமிடம் ஆகியவற்றுடன் மாதாந்திர அலவன்ஸாக ரிம550 ஐயும் உள்ளடக்கியுள்ளது என்று தெரிவித்த அவர், பொறியாளர் படிப்பிற்கு இட்டுச் செல்லும் அறிவியல் அடிப்படைக் கல்வி நிலை பயிற்சியை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் முழு உபகாரச்சம்பளம் கொடுக்கப்படுகிறது. அவ்வாறே வணிகத்துறைக்கு தகுதி பெற்ற அனைத்து அடிப்படைக் கல்வி நிலை மாணவர்களுக்கும் உபகாரச்சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் சிறப்பான மாணவர்கள் அவர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக உயர்தரமான மற்றும் பெறுவதற்கு வசதியான கல்வியை வழங்குவதற்கான அதன் பங்கை எப்போதும் ஆற்றியுள்ளது என்று பேராசிரியர் எம்.இரவிச்சந்திரன் கூறியுள்ளார்.