திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் ரசிப் அப்துல் ரஹ்மான் இன்று காலை மணி 9.20க்கு கோலா திரெங்கானுவில் உள்ள விஸ்மா டாருல் இமானுக்கு வந்து சேர்ந்தபோது “Hidup MB” (எம்பி வாழ்க) முழக்கம் அவரை வரவேற்றது.
Pertubuhan Amal Maaruf Peribumi(கேம்ப்) என்ற என்ஜிஓ உறுப்பினர்கள் சுமார் 100 பேர் கூடிநின்று அவரை வாழ்த்தொலியுடன் வரவேற்றனர்.
மந்திரி புசார் சட்டமன்றம் செல்வதற்குமுன் அவர்களுடன் கைகுலுக்கினார்.
சற்று நேரம் கழித்து திரெங்கானு முன்னாள் மந்திரி புசார் அஹ்மட் சைட் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்று வினவினர். அவர் சிரித்துக்கொண்டே , “எனக்கு எப்படித் தெரியும்?”, என்றார்.
அஹ்மட் சைட், அஹ்மட் ரசிப் இருவருக்குமிடையில் நெருக்கடி முற்றி இருப்பதால் திரெங்கானுவில் விரைவில் திடீர் தேர்தல் வரலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அதனால் இன்று திரெங்கானு சட்டமன்ற நடப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.