நேற்று தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா தளமான ஹூவா ஹின் நகரில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒரு பெண்மணி கொல்லப்பட்டார். 10 வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
அச்சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என ஹுவா ஹின் போலீஸ் நிலைய துணைத் தலைவர் லெப்- கர்னல் சமீர் யுசம்ரான் உறுதிப்படுத்தியுள்ளார்.
“முதல் குண்டு இரவு 9.59க்கு வெடித்தது. அதற்கு சில மீட்டர் தள்ளி சில நிமிட இடைவெளியில் இரண்டாவது குண்டு வெடித்தது. கைபேசியைக் கொண்டு குண்டை வெடிக்க வைத்திருக்கிறார்கள். கைபேசியின் உடைந்த பகுதிகளை சம்பவம் நடந்த இடத்தில் அதிகாரிகள் கண்டெடுத்தனர்”, என்று அவர் பெர்னாவிடம் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட தாய்லாந்து பெண் தெரு ஒரமாக உணவு விற்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளில் ஐவர் இத்தாலியர், மூவர் டச்சுக்காரர்கள், ஆஸ்திரேலியர் ஒருவர், ஜெர்மானியர் ஒருவர்.