பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் ஒன்பது பேர் கைது

arrestபயங்கரவாத   நடவடிக்கைகளில்   ஈடுபட்டார்கள்  என்ற   சந்தேகத்தின்பேரில்   போலீசார்  ஒன்பது   பேரைக்  கைது   செய்துள்ளனர்.  அவர்களில்  இருவர்  இரண்டு   மாதங்களுக்கு  முன்பு    பூச்சோங்கில்    மொவிடா  பப்மீது    குண்டுவீச்சுத்   தாக்குதல்   நடத்தியவர்கள்   என்று   ஐயுறப்படுகிறது.

போலீசார்     ஆகஸ்ட்    9-இல்    கிளந்தான்,    கோலா   கெராயில்    மலைப்பாங்கான    பகுதியில்     கைது    செய்த    ஆறு   மலேசியர்,  மூன்று    வெளிநாட்டவரில்    அவ்விருவரும்-    ஜஸ்நிசாம்  ரோஸ்னி,   முகம்மட்    சைபுடின்     மூஜி  –  இருந்தார்கள்   என  போலீஸ்  படைத்   தலைவர்    காலிட்  அபு   பக்கார்   கூறினார்.

ஜஸ்னிசாமும்    முகம்மட்  சைபுடினும்   மேலும்   இருவருடன்   சேர்ந்து  ஜோகூர்  பாருவில்  ஒரு   கேளிக்கை   மையத்தைத்    தாக்குவதற்கு   உத்தரவுக்காகக்   காத்திருந்தார்கள்   என  காலிட்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

அக்கைது  நடவடிக்கையை   அடுத்து    ஜோகூர்   பாரு   தாக்குதலில்   பயன்படுத்தப்பட  விருந்த   கையெறி    குண்டு  ஒன்று  பத்து   பாகாட்டில்   கைப்பற்றப்பட்டது.

சாபாவில்,  ஐஎஸ்-தொடர்புள்ள   17வயது  இளைஞன்   ஒருவனை    போலீசார்  கைது    செய்திருப்பதாகவும்   ஐஜிபி     கூறினார்.  அவன்   சண்டகானில்    முஸ்லிம்- அல்லாதாரின்   தலைகளை   வெட்டுவதற்கு    உத்தரவுக்காகக்   காத்திருந்தானாம்.

“முகநூல்  பதிவு   ஒன்றில்    ஐஜிபி-யைக்   கொல்லப்    போவதாகவும்    அவன்    மிரட்டியிருந்தான்”,  என்றாரவர்.