மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் சுல்கிப்ளி அஹ்மட் பொதுச் சேவைத் துறையில் ஊழலை ஒழிக்க விரும்பினால் அப்பணியை உயர்மட்டத்திலிருந்து தோடங்க வேண்டும்.
இதனைத் தெரிவித்த கோலா திரெங்கானு எம்பி ராஜா கமருல் பஹ்ரின், அரசாங்கம் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
“பிரச்னை என்னவென்றால் எம்ஏசிசியும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் வீசும் வலை மிகவும் வலுவற்றது அதனால் பலவீனமான, சிறிய மீன்கள்தான் சிக்குகின்றன. பெரிய மீன்கள் நழுவி சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என்று சென்று அங்கு ஆடம்பரச் சொத்துகளை வாங்குகின்றன.
“ஒரு மீன் தலையிலிருந்துதான் அழுகத் தொடங்கும். தலைவர்கள் ஊழல் செய்தால் கீழே உள்ளவர்களும் ஊழல் செய்யத் தொடங்கி விடுவார்கள்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அமெரிக்க நீதித்துறை வழக்கைக் குறிப்பிட்டு, சிவில்சேவையைத் துப்புரவுபடுத்துவதில் “மலேசிய முதல்நிலை அதிகாரியை”ப் பிடிப்பதும் அடங்குமா என்றும் அவர் வினவினார்.