#TangkapNajib பேரணி நடத்தப்படும்போது போலீசார் கடந்த ஆண்டில் செய்ததுபோல் பேரணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது எனப் பேரணி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமே தவிர குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் நலனுக்காக செயல்படக்கூடாது என மாணவர் கூட்டமைப்பான டெமி மலேசியாவின் பேச்சாளர் இப்ராகிம் முகம்மட் யாக்கூப் கேட்டுக்கொண்டார்.
“இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மக்களின் நலன் காக்க முன்னிற்க வேண்டும். குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் நலன்காக்கும் கருவியாக மாறிவிடக் கூடாது.
“அமைதிப் பேரணிச் சட்டத்தைக் கொண்டு மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கக் கூடாது. ஒன்றுகூடும் உரிமை கூட்டரசு அரசமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் ஓர் அடிப்படை உரிமையாகும்”, என்றாரவர்.