மலேசிய குற்றச்செயல் கண்காணிப்புப் படை (மைவாட்ச்) தலைவர் ஆர். சஞ்சீவன் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக இன்று கோலாலும்பூர் மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
சஞ்சீவன், கோலாலும்பூர், கம்போங் பாருவில் , ஜாலான் ராஜா உடாவில் உள்ள ரெஸ்டோரன் மரகாஷ் உரிமையாளர் முகம்மட் அஸ்ஹான் ஹம்சாவை மிரட்டிப் பணம் கேட்டாராம்.
அவர் குற்றவியல் சட்டம் பிரிவு 395-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டார். அது, அக்குற்றத்துக்கு கூடினபட்சம் ஏழாண்டுச் சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்கிறது.
சஞ்சீவனுக்கு எதிராக ஏற்கனவே நெகிரி செம்பிலான், பகாங் நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் இருப்பதையும் மூன்றிலும் அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருப்பதையும் அவரின் வழக்குரைஞர் ரவீன் ஜே நீதிமன்றத்துக்குச் சுட்டிக்காட்டினார்.
“மூன்று வழக்குகளிலும் பிணை வழங்கப்பட்டு அவர் மொத்தம் ரிம21,000 பிணைப் பணம் கட்டியிருக்கிறார்”, என்றாரவர்.
இந்த வழக்கிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மெஜிஸ்திரேட் அஹ்மட் சொலிஹின் ஒருவரின் உத்தரவாதம் ரிம2,500 பிணையில் சஞ்சீவனை விடுவித்தார்.