குடிநுழைவுத்துறை மையங்களில் கொடுமையோ கொடுமை: கம்போடிய பணிப்பெண்கள் முறைப்பாடு

maidஜூரு   குடிநுழைவுத்துறை    தடுப்பு  மையத்தில்   தடுத்து  வைக்கப்படுவோர்   கொடூரமாக   நடத்தப்படுவதாகவும்   அதன்  விளைவாக   சிலர்  இறந்தும்  போனார்கள்   என்றும்    இரு  கம்போடிய  பெண்கள்   கூறிக்கொள்கின்றனர்.

அவ்விருவரும்   மலேசியாவில்   பணிப்பெண்களாக   இருந்தவர்கள்.    கம்போடிய   மத்திய  தொழிலாளர்  உரிமை   அமைப்பின்   முயற்சியின்  பலனாக      அவ்விருவரும்   இப்போது     கம்போடியாவுக்குத்     திரும்பிச்  சென்றிருப்பதாக   கம்போடிய   டெய்லி    நாளேடு   கூறியது.

அவர்களில்   ஒருவர்   சுமார்  ஈராண்டுகளாக   மலேசியாவில்   பணிப்பெண்ணாக  பனியாற்றியுள்ளார்.  இவ்வாண்டு   தொடக்கத்தில்  அவர் கைது    செய்யப்பட்டு   ஜூரு-வுக்கு  அனுப்பப்பட்டார்.

பணி  செய்த  இடத்தில்  கொடுமைப்படுத்தப்பட்டதால்    தப்பியோடிய   இவர்  அதே  கொடுமைகளைத்   தடுப்பு    முகாமில்   அனுபவிக்க   நேரிட்டது.

“சிறையில்   அதிகாரிகள்  சொல்வதைப்  புரிந்து  நடந்து   கொள்ளாவிட்டால்     அடி,  உதைதான்”,  எனக்  கடந்த   மாதம்   அந்நாளேட்டுக்கு  அளித்த   நேர்காணலில்   அப்பெண்   கூறினார்.

“இரண்டு  கம்போடியர்களும்   ஒரு   வியட்நாமிய   பெண்ணும்    திரும்பத்  திரும்ப   முகத்திலும்   நெஞ்சிலும்   குத்தப்பட்டு  இறந்து   போனதைக்  கண்ணால்  கண்டேன். நாங்கள்  அனைவரும்  ஒரே  இடத்தில்தான்   வைக்கப்பட்டிருந்தோம்.  அம்மூவரும்   கடும்  சித்தரவதைக்கு   ஆளானார்கள்.

“விடிந்ததும்   அவர்களை    எழுப்பினேன்.   அவர்கள்  உயிருடன்  இல்லை”.

இவர்     கடும்  சித்திரவதைகளுக்கு   ஆளாகவில்லை.   ஓரளவுக்கு  மலாய்,  ஆங்கில  மொழிகள்   பேசத்    தெரியும்  என்பதால்    தப்பினார்.

அதன்  காரணமாகவே,  மற்ற தடுப்புக்  கைதிகளை   மருத்துவமனைகளுக்கு   அனுப்பும்போது   அவர்கள்  சொல்வதை  மொழிபெயர்ப்பதற்கு    உதவியாக   இவரையும்   அனுப்பி   வைப்பார்கள்.  அங்கு   மூன்று   கம்போடிய  பெண்களும்  ஒரு  வியட்னாமியரும்  இறக்கக்   கண்டார்.

“ஆக    மொத்தம்   ஐந்து    கம்போடியர்களும்   இரண்டு   வியட்னாமியரும்   இறந்ததற்கு  நானே   சாட்சி”,  என்றாரவர்.