ஊழல் குற்றங்களுக்காக திங்கள்கிழமை கைதான மூன்று உயர் அதிகாரிகள்மீதான விசாரணை முடியும்வரை அவர்கள் வழங்கிய குத்தகைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் எங் கூறுகிறார்.
அவர்களால் வழங்கப்பட்ட குத்தகைகளில் ஊழல் நிகழ்திருப்பது தெரிய வந்தால் குத்தகைகளை இரத்துச் செய்ய வேண்டும் அல்லது மறு டெண்டருக்கு விடப்பட வேண்டும்.
ஊழல் என்பது இருதரப்பு சம்பந்தப்பட்டது. வாங்குவதற்கு ஒருவர் இருந்தால் கொடுப்பதற்கு ஒருவர் வேண்டும்.
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் இந்த மூன்று அதிகாரிகளுக்கும் கையூட்டு கொடுத்த தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.
எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்தின் (டிபிகேஎல்) உயர் அதிகாரி. கோலாலும்பூரின் மேம்பாட்டுத் திட்டங்கள் பலவற்றுக்கு அவர்தான் பொறுப்பு.
எனவே, அவரின் ஒப்புதல் பெற்ற திட்டங்களை நன்கு ஆராய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தங்கள் மேல் அதிகாரி ஊழல் செய்வது தெரிந்தும் அது குறித்து புகார் செய்யாமல் இருந்த மற்ற அதிகாரிகள்மீதும் எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாரவர்.