நஜிப்: முன்னாள் தலைவரின் வெளியுறவுக் கொள்கை எதிர்ப்புக் குணமிக்கது, தன்னலமிக்கது

najibபிரதமர்     நஜிப்    அப்துல்    ரசாக்     நாட்டின்  வெளியுறவுக்  கொள்கையைப்  பொறுத்தவரை     வேறு  பாதையில்  செல்ல    முடிவெடுத்ததாகக்    கூறினார்.

“பழைய   அணுகுமுறையை  விட்டு  விலகி     நான்  வேறு  மாதிரி  இருக்க    விரும்பினேன்.

“ஏனென்றால்,  மலேசியாவின்   வெளியுறவுக்  கொள்கை   நாட்டுக்கும்   மக்களுக்கும்   நன்மை   அளிக்கக்கூடிய  பங்காளித்துவத்தை   வளர்ப்பதாக  இருத்தல்  வேண்டும்   என   நம்பினேன்”.  இன்று  கோலாலும்பூரில்  காமன்வெல்த்    பொது   நிர்வாகம்,  மேலாண்மை   சங்கத்தின்      ஈராண்டுக்கொருமுறை   மாநாட்டைத்   தொடக்கிவைத்தபோது   நஜிப்  இவ்வாறு  கூறினார்.

கடந்த  கால  வெளியுறவுக்  கொள்கை  பற்றிக்  குறிப்பிட்ட    நஜிப்,  முன்பு   மலேசியாவுக்குத்   தலைவராக    இருந்தவர்  வேண்டுமென்றே  இணக்கமற்ற  போக்கைக்  கொண்ட   ஒரு  வெளியுறவுக்  கொள்கையைப்  பின்பற்றினார்   என்றார்.  ஒருவேளை   தனிப்பட்ட   புகழுக்கு   ஆசைப்பட்டு    அவர்   அவ்வாறு   செய்திருக்கலாம்.

“ஆனால்,  அது    நாட்டின்   நலனுக்கு   உகந்ததல்ல.  உண்மையில்   அது   தன்னலமிக்கது,  குறுகிய   நோக்கம்  கொண்டது,  பிரச்னைகளைத்  தீர்ப்பதற்குப்  பதில்   அவற்றை   மேலும்   மோசமாக்கக்  கூடியது”,  என்றார்.   நஜிப்  யாருடைய  பெயரையும்   கூறவில்லை   என்றாலும்  மகாதிரைத்தான்   அவர்   குறிப்பிடுகிறார்   என்பதை   ஊகிக்க   முடிகிறது.