போலீசாரால் அறைந்து, உதைத்து லைட்டரால் சுடப்பட்டதாக இரு இளவயது சகோதரர்கள் கூறுகின்றனர்

 

Beaten by policeஒரு சாட்சிய அறிக்கையில் கையெழுத்து இட வேண்டும் என்பதற்காக தங்களை போலீசார் அறைந்து, உதைத்து, சிகரெட் லைட்டரால் சுட்டு துன்புறித்தினர் என்று இரு இளவயது சகோதரர்கள் கூறினர்.

அவ்விரு இளைஞர்களின் வழக்குரைஞர், டி. சஷி தேவன், இவ்விவகாரம் குறித்து ஒரு மகஜரை இன்று கோலாலம்பூரில் மனித உரிமைகள் ஆணையத்திடம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

லெட்சுமணன் நாயிடு, 19, மற்றும் விக்ரம் நாயிடு ஆகிய அவ்விரு சகோதரர்களும் ஏப்ரல் 14 இல் நடந்த ஒரு கைகலப்பு சம்பந்தமாக ஈப்போ மாவட்ட போலீஸ் தமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

தற்போது, அவ்விருவரும் ஜோகூர், குளுவாங் சிறையில் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 10 இல், அவ்விரு இளைஞர்களையும் சந்தித்த போது அவர்கள் தாங்கள் அனுபவித்தத் துன்பங்களைப் பற்றி கூறியதாக சஷி தெரிவித்தார்.

அவர்களுக்கு வைத்திய உதவிகள் கொடுக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, பயம் காரணமாக வைத்தியர் வேண்டும் என்று கேட்கவில்லை என்று அந்த இளைஞர்கள் கூறியதாக சஷி மேலும் கூறினார்.

இவ்விவகாரம் பற்றி போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கரிடம் கேட்டதற்கு இது பற்றி விசாரிக்கப்படும் என்றும், போலீஸ் தரப்பில் தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மலேசியாகினியிடம் கூறினார்.