‘கிரிமினல் யார்?’ : என்ற கேட்ட எம்பிக்கு ஐஜிபியின் ஓன்லைன் விளக்கம்

 

igpடிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கரை அவமதிக்கும் வகையில் கூறியிருந்த கருத்துக்கு காலிட் மெரியம்-வெப்ஸ்டர் ஓன்லைன் அகராதியைக் காட்டி பதில் அளித்துள்ளார்.

மைவாட்ச் என்ற என்ஜிஓவின் தலைவர் ஆர். ஶ்ரீ சஞ்சீவனை “கிரிமினல்” என்று ஐஜிபி வர்ணித்திருந்தது சம்பந்தமாக லிம், காலிட்டுக்கு ஒரு டிவிட் செய்தி அனுப்பினார். அதில் அவர் காலிட்டை “நீர் ஏன் இவ்வளவு முட்டாள்தனமானவராக இருக்கிறீர்? அவர் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படுகிறவர், கிரிமினல் அல்ல”, என்று பதிவு செய்திருந்தார்.

லிம்முக்கு பதில் அளித்த காலிட், கிரிமினல் யார் என்பதை விளக்கும் அகராதியை மேற்கோள் காட்டிருந்ததோடு “யார் இதில் முட்டாள்தனமானவர்?” என்று திருப்பிக் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, லிம் தமக்கு பேச்சற்றுப் போய்விட்டது ஏனென்றால் காலிட் சட்டம் புரியாதவராக இருக்கிறார் என்றார். அவருக்கு அதைப் புரிய வைப்பதற்கு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் உதவுவார் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

இதற்கு முன்னதாக, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் காலிட்டுக்கு எதிராக சஞ்சீவன் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் (எம்எசிசி) புகார் செய்யப் போவதாக கூறியிருந்தது பற்றி அவரிடம் கேட்ட போது, “நான் ஒரு கிரிமினலுக்கு பதில் கூற வேண்டிய தேவை இருப்பதாகக் கருதவில்லை. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று காலிட் பதில் அளித்தார்.

சஞ்சீவன் அவரது எம்எசிசி புகாரில் காலிட்டின் சகோதரருக்கு சொந்தமான ஒரு சுடுதல் கழகம் (shooting academy) இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் ஆவணங்கள்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் சகோதரர் அப்துல்லா, உங்குல் சூட்டிங் அகடமியின் இயக்குநராக இருக்கிறார்.

இந்நிருவனம் காலிட் ஐஜிபியாக பதவி ஏற்ற ஆறு மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் 2013 இல் நிறுவப்பட்டது.