இரு சகோதரர்களைச் சித்திரவதை செய்யவில்லை , பேராக் போலீஸ் மறுப்பு

polisவிசாரணைக்கு  உதவியாக   ஏப்ரல்  மாதம்   தடுத்துவைக்கப்பட்ட   இரு  சகோதரர்கள்    தடுப்புக்  காவலில்  இருந்தபோது   சித்திரவதைக்கு   ஆளாக்கப்பட்டதாகச்   கூறும்   நாளேட்டுச்  செய்திகளை    பேராக்   போலீசார்  மறுத்தனர்.
என்.லெட்சுமணன்  19,   என். விக்ரம்  ஆகிய அவ்விரு சகோதரர்களும்  கொலைமுயற்சி     குற்றச்சாட்டின்பேரில்     ஏப்ரல் 14 இல்     ஆறு   நாள்களுக்குத்   தடுத்து வைக்கப்பட்டனர்   என்று   மாநில   போலீஸ்   தலைவர்   அப்துல்   ரஹிம்  ஹானாபி   கூறினார்.

அவ்விருவரும்   கலகம்   செய்தார்கள்  என்று   குற்றவியல்  சட்டத்தின்   பிரிவு    148-இன்கீழ்    ஏப்ரல்  26-இல்  மீண்டும்  கைது    செய்யப்பட்டதாக   அப்துல்  ரஹிம்    தெரிவித்தார்.

“மே  22-இல்,  குண்டர்  கும்பல்  36  உறுப்பினர்களான   அவ்விருவரும்   வன்முறைக்  குற்றங்களில்    ஈடுபட்டதற்காக   குற்றச்   செயல்  தடுப்புச்  சட்ட(பொகா) த்தின்கீழ்   மீண்டும்  தடுத்து  வைக்கப்பட்டனர்”,  என   நேற்றிரவு  ஈப்போவில்   வெளியிட்ட   அறிக்கை  ஒன்றில்   அவர்  கூறினார்.

போகா   சட்டத்தின்கீழ்க்  கைதான  அவ்விரு  சந்தேகப்  பேர்வழிகளையும்  ஜூலை  20  தொடங்கி   ஈராண்டுகளுக்கு  ஜோகூர்,  குளுவாங்கில்  உள்ள   சிறப்பு   மறு  வாழ்வளிப்பு    மையத்தில்   தடுத்து    வைக்குமாறு   குற்றத்   தடுப்பு  வாரியம்    உத்தரவிட்டது.

இந்த  விளக்கத்தை   அளித்த    அப்துல்  ரஹிம்   போலீசார்   மேற்கொண்ட    நடவடிக்கையில்   அதிருப்தி    கொண்டோர்   சட்டப்பூர்வ  வழிகளில்   தங்கள்  ஆட்சேபனையைத்   தெரிவிக்கலாம்    என்றார்.

லெட்சுமணனும்   விக்ரமும்   போலீசார்    தங்களைத்   துன்புறுத்தியதாகக்  கூறி   வெள்ளிக்கிழமை      தங்கள்  வழக்குரைஞர்  சசி  தேவன்   மூலமாக   மலேசிய   மனித  உரிமை  ஆணையத்திடம்    மகஜர்  ஒன்றைக்  கொடுத்தனர்.

-பெர்னாமா