சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் முன்னாள் அதிகாரி சுல்கிப்ளி அஹ்மட் கடந்த மாதம் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவராக நியமிக்கப்பட்டபோது, ஆணையத்தின் தலைமைப் பதவிக்கு “வெளியிலி”ருந்து ஒருவரை ஏன் அழைத்து வர வேண்டும் எனக் கேள்விகள் கிளம்பின.
ஆனால், எம்ஏசிசி- இல் இந்த நடைமுறை ஓன்றும் புதிதல்ல என்கிறார் எம்ஏசிசி-இன் முன்னாள் துணைத் தலைவர் ஜக்கரியா ஜப்பார். ஜக்கரியா 33 ஆண்டுகள் ஊழல்தடுப்பு ஆணையத்தில் பணியாற்றியவர். கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
“நான், அது ஏசிஏ-ஆக இருந்தபோதும் பின்னர் எம்ஏசிசி-ஆக மாறியபோதும் ஏழு தலைமை இயக்குனர்கள் அல்லது தலைமை ஆணையர்களின்கீழ் பணி புரிந்திருக்கிறேன். அபு காசிம் எம்ஏசிசி-இன் 11வது தலைவர்”, என்று சுல்கிப்ளிக்கு முன் எம்ஏசிசி தலைவராக இருந்தவர் பற்றி ஜப்பார் குறிப்பிட்டார்.
“அவர்களில் இருவர் மட்டுமே ஊழல்தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அஹமட் சைட், மற்றவர் அபு காசிம். மற்றவர்கள் எல்லாம், சுல்கிப்ளி உள்பட, வெளியிலிருந்து வந்தவர்களே”. எம்ஏசிசி தலைவர் யார் என்பது தமக்கு என்றும் பிரச்னையாக இருந்ததில்லை என்றாரவர்.
ஊழல்தடுப்பு ஆணையத் தலைவர்கள் எங்கிருந்தும் நியமிக்கப்படலாம் என்று எம்ஏசிசி சட்டம் கூறுவதாகவும் அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவதாகவும் ஜப்பார் கூறினார்.