சிறார்கள் தன்மூப்பாக மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க இன்னும் நிறைய செய்யப்பட வேண்டும்

g25அரசாங்கத்தில்    உயர்பணி   புரிந்து    ஓய்வு  பெற்ற      25  மலாய்க்காரர்களைக்  கொண்ட   அமைப்பான  ஜி-25,   சமயங்களுக்கிடையில் சிவில் திருமணங்கள்   தொடர்பில்   எழும் சர்ச்சைகளை சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பதற்கு வகைசெய்யும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்   அறிவித்திருப்பதை    வரவேற்றுள்ளது.

சட்டச் சீர்திருத்த (திருமணமும் விவாகரத்தும்) சட்டம் 1976 (சட்டம்   164) க்கான சட்ட திருத்தம் அடுத்த அக்டோபர் நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்படும் என்று   பிரதமர்     கூறினார்.

மூன்று  காரணங்களின்  அடிப்படையில்    சட்ட திருத்தம்   கொண்டு  வரப்படுகின்றது.   ஒன்று, சிவில் திருமணத்தில் எழும் விவாகரத்து சம்பந்தமான பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றுக்கு சிவில் நீதிமன்றத்தில் தீர்வுகாண்பது.

இது,  குழந்தைகளை  யாரிடம்  ஒப்படைப்பது,  குழந்தைகளின்  பராமரிப்பு,   அவர்களின்  கல்வி    போன்ற  விவகாரங்களுக்குத்  தீர்வு  காண  உதவும்.

இரண்டாவது,  சம்பந்தப்பட்ட தம்பதிகள் தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு  அது  ஒரு வாய்ப்பை   அளிக்கிறது.

மூன்றாவது, தம்பதியினரில் ஒருவர் இஸ்லாத்திற்கு மாறும் போது  சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்களுக்கிடையில் மோதல் ஏற்படுவதைத்   தவிர்க்க    உதவும்.

இப்போது இருக்கும் சட்டத்தில் இது பற்றிய குறைபாடு உண்டு. அதை இந்தச் சட்ட திருத்தம் தீர்க்கும்.

2004-இல்   சியாமளா   வழக்கு    தொடங்கி,  பல   வழக்குகளில்       கணவன்  இஸ்லாத்துக்கு   மதமாறிய   பின்னர்    மனைவியின்    அனுமதியின்றியே   குழந்தைகளையும்  மதமாற்றம்   செய்து    முஸ்லிம்- அல்லாத  மனைவிமாருக்கு  அநீதி     இழைக்கும்   சம்பவங்கள்   நிகழ்ந்துள்ளன   என்றும்  அப்படிப்பட்ட   சம்பவங்களுக்கு   சட்டம்   164-க்குக்   கொண்டுவரப்படும்     திருத்தங்கள்   முற்றுப்புள்ளி  வைக்கும்  எனவும்  ஜி-25  கூறிற்று.

முன்குறிப்பிட்ட   வழக்குகளில்   எல்லாம்    மனைவிக்குக் குழந்தைகளை  வைத்துக்கொள்ளும்  உரிமையை   மறுக்கும்   நோக்கத்தில்தான்       குழந்தைகள்   தன்மூப்பாக   மதமாற்றம்  செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரசமைப்பின்  பகுதி  12(4),  சிறார்  மதம்  பற்றிக்  குறிப்பிடுகிறது.

அது  18வயதுக்குக்  குறைந்தவர்களின்   சமயத்தை  முடிவு   செய்பவர்கள்   அவர்களின்    பெற்றோர்  அல்லது  பாதுகாப்பாளர்கள்   என்று   கூறுகிறது.

ஆனால்,  2008-இல்  சுபாஷினி   வழக்கில்    கூட்டரசு   நீதிமன்றம்    அளித்த  தீர்ப்பு     பிரச்னையை  மேலும்  சிக்கலாக்கியது.  அது  “பெற்றோர்”  என்ற  சொல்லுக்கு     தாய்தந்தையில்   யாராவது   ஒருவர்  என்றுதான்  பொருள்  அது     இருவரையும்  குறிக்காது   என்று  தீர்ப்பளித்தது.

அவ்வழக்கில்  கூட்டரசு   நீதிமன்றம்   அளித்த   தீர்ப்பு  தவறு   என்பது  மலேசிய   வழக்குரைஞர்  மன்றத்தின்  கருத்து.  சட்ட   வல்லுனர்கள்  பலரும்கூட    அவ்வாறே  நினைக்கிறார்கள்.

கூட்டரசு    அரசமைப்பு  பகுதி  160   பெற்றோர்  என்பது  பன்மைச் சொல்  என்று  கூறுகிறது.

2002வரை ,  அரசமைப்பின்  பஹாசா   மலேசியா  வடிவத்தில்     “பெற்றோர்”  என்ற  சொல்   “தாய்தந்தை”  என்றே  மொழிபெயர்க்கப்பட்டது.

ஆனால்,  2002  ஆண்டுப்  பதிப்பில்  “பெற்றோர்”  என்ற  சொல்  “தாய்  அல்லது  தந்தை”  என  மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

“தாய்தந்தை”  என்ற  சொல்லை    “தாய்   அல்லது  தந்தை”  என  மாற்றுவதற்குக்   கூட்டரசு  அரசமைப்பில்   திருத்தம்   செய்யப்பட்டிருக்க   வேண்டும்.

ஆனால்,  தனக்குத்   தெரிந்தவரை   அப்படி  திருத்தம்  எதுவும்  செய்யப்பட்டதில்லை  என   ஜி-25  குறிப்பிட்டது.

இதைக்  கருத்தில்  கொண்டு   அரசாங்கம்  கூட்டரசு   அரசமைப்பின்   பகுதி  12(4)-க்குத்   திருத்தம்  கொண்டு  வந்து  சுபாஷினி  வழக்கில்   கூட்டரசு   நீதிமன்றம்   அளித்த   தீர்ப்பை  இரத்துச்   செய்து   “பெற்றோர்”  என்றால்  அது    பெற்றவர்கள்  இருவரையும்தான்  குறிக்கும்   ஒருவரை  மட்டும்  குறிப்பதல்ல   என்பதை  ஐயம்  திரிபற   விளக்க  வேண்டும்  என  ஜி-25  வலியுறுத்துகிறது.