மகாதிர்: நஜிப்பின் தந்தையே எதிரணியைச் சேர்த்துக் கொண்டார், நான் ஏன் டிஏபியுடன் சேரக் கூடாது?

dr mதாம்  டிஏபியுடன்   ஒத்துழைப்பதைக்  குறைகூறுவோருக்குப்   பதிலளித்த    முன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிர்   முகம்மட்,     பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கின்   தந்தையார்கூட  எதிர்க்கட்சிகளைச்  சேர்த்துக்  கொண்டு   கூட்டணி  அமைத்தது   உண்டு    என்றார்.

நேற்றிரவு   கோத்தா  பாருவில்    ஒரு  நிகழ்வில்  உரையாற்றிய  மகாதிர்,  1969  இனக்  கலவரத்துக்குப்    பின்னர்,  அப்போதைய   பிரதமர்   அப்துல்  ரசாக்   கூட்டணியையும்   எதிரணியையும்  ஒன்றிணைக்கும்  முயற்சியை  மேற்கொண்டதையும்    அதன்  பயனாக  1973-இல்    பாரிசான்  நேசனல்  (பிஎன்)  அமைந்ததையும்    எடுத்துரைத்தார்.

புதிய  கூட்டணியில்   டிஏபி-யையும்   சேர்த்துக்கொள்ள   அப்துல்    ரசாக்  விரும்பினார்.   அது  மறுத்து   விட்டது.

“கடந்த  காலத்தில்   லிம்  கிட்  சியாங்கைக்   கடுமையாக   தாக்கிப்  பேசி   வந்துள்ள   நானும்    என்னைக்  கடுமையாக  சாடி  வந்துள்ள   அவரும்  எப்படிக்  கூட்டுச்  சேர   முடியும்   என்று   கேட்கிறார்கள்.

“வெற்றிகாணும்   முயற்சியில்   எப்போதும்  விவேகமாக    நடந்து  கொள்ள  வேண்டும். உதாரணத்துக்கு   நாட்டைப்   பாதுகாக்க   துன்  ரசாக்   செய்ததைப்  பாருங்கள்.

“ஒரு  கூட்டணி  அமைக்க    எதிர்க்கட்சிகளையும்   அழைத்தார்.  இன்று  அது   இன்னும்  பெரிய  கூட்டணியாக   விளங்குகிறது.

“எல்லாருமே  எதிரணியிலிருந்து   வந்தவர்கள்.   அதில்   அரசாங்கத்தை  வலுப்படுத்தும்   துன்  ரசாக்கின்  விவேகத்தைத்தான்   பார்க்கிறோம்”,  என்று  மகாதிர்  கூறியதாக  சினார்  ஹரியான்   அறிவித்துள்ளது.

அதே  உத்தியைதான்  தாமும்  பின்பற்றுவதாக  மகாதிர்  கூறினார்.