அம்னோ தலைவர்கள் கபட நாடகம் ஆடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனச் சாடினார் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இடைக்காலச் செயல்குழுத் தலைவர் சைட் சித்திக் சைட் அப்துல் ரஹ்மான்.
“டாக்டர் மகாதிர் முகம்மட் பங்சா ஜோகூர் குறித்துக் கருத்துரைத்தபோது பலர், இவ்வளவு காலமாக மலேசியாவில் தாங்கள்தான் அரசமைப்புப்படியான முடியாட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள்போல் அவரைக் குறைகூறினார்கள்”, என சித்திக் ஓர் அறிக்கையில்
ஆனால், ஆட்சியாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் அம்னோ உண்மையாக நடந்து கொண்டதில்லை என்றவர் சாடினார்.கேள்விகளை அடுக்கி அம்னோவின் கபடத்தனத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சியாளர்களின் ஒப்புதலின்றி தேசிய பாதுகாப்பு மன்றச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அம்னோ எங்கு போனது என்று அவர் வினவினார்.
அச்சட்டத்தைச் சீர்செய்ய வேண்டும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கேட்டுக்கொண்டபோது அம்னோ-பிஎன் ஒன்றும் செய்யாமலிருந்தது ஏன்?
அரசியலில் தலையிட்டால் “வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்” எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் ஜோகூர் பட்டத்திளவரசரை எச்சரித்தாரே அப்போது அம்னோ வாயைப் பொத்திக்கொண்டிருந்தது ஏன்?
லங்காவி எம்பி மலேசியாவின் முதல்நிலை அதிகாரி மாட்சிமை தங்கிய மாமன்னர்தான் என்று ஆதாரமில்லாத அறிக்கை ஒன்றை விடுத்தாரே அப்போது அம்னோ எங்கு போனது?
பங்சா ஜோகூர் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அம்னோ உறுப்பினர்கள் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஊழலை எதிர்த்ததற்காக கட்சிநீக்கம் செய்யப்பட்டபோது எங்கு சென்றார்கள்?
“இவையெல்லாம் நடந்தபோது ‘ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக போராடுவதாகக் கூறிக்கொள்வோர்’ எங்கு போனார்கள்? அம்னோ எங்கு போனது?”
மகாதிர் பல தவறுகள் செய்திருக்கிறார் என்று கூறிய சித்திக் அவர் ஒன்றும் குற்றம்குறையற்ற தலைவர் அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டார்.
என்றாலுல் மகாதிராவது கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்பு கோரினார்.
“அம்னோ என்ன செய்தது? குறைகூறுவது தவறில்லை. ஆனால், மற்றவர் கொல்லைப்புறம் பற்றிக் குறை சொல்லுமுன்னர் சொந்த கொல்லைப்புறம் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்”, என்றாரவர்