முறையீட்டு நீதிமன்றம், இன்று, பெர்சேயின் மேல்முறையீட்டை ஏற்று அதன் மஞ்சள்நிற டி-சட்டைக்கும் பெர்சே என்று எழுதப்பட்ட துண்டு வெளியீடுகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை ‘நியாயமற்றது’ என அறிவித்தது.
மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி முகம்மட் ஸவாவி முகம்மட் சாலே அவ்வாறு தீர்ப்பளித்தார்.
அவருடன் நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி, நீதிபதி அஸ்மாபி முகம்மட் ஆகியோர் பெர்சேயின் மேல்முறையீட்டை விசாரித்தனர்.
பிப்ரவரி 19ஆம் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றம் பெர்சே 4 டி-சட்டையையும் அதன் துண்டு வெளியீடுகளையும் தடை செய்யும் அரசாங்க முடிவை நிலைநாட்டித் தீர்ப்பளித்திருந்தது.
அதற்கு எதிராக பெர்சே மேல்முறையீடு செய்திருந்தது.
முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை பெர்சே தலைவர் மரியா சின் வரவேற்றார்.
பெர்சே 4-இன் முதலாமாண்டு நிறைவன்று வெளிவந்த இத்தீர்ப்பு மக்கள் கண்டனம் தெரிவிப்பதற்காக அமைதியான முறையில் ஒன்று கூடுவதை அங்கீகரிக்கிறது என்றாரவர்.
இது ஒரு முக்கியமான தீர்ப்பு. ஏனென்றால் டி-சட்டை அணிந்ததற்காகவும் கையில் பெர்சே துண்டு வெளியீடுகளை வைத்திருந்ததற்காகவும் பெர்சே பேரணியின்போது பலர் கைது செய்யப்பட்டனர்.
“இன்றைய தீர்ப்பு அமைச்சரின் தடை உத்தரவு செல்லாது என அறிவித்துள்ளது. இனி, கைது செய்யப்படுவோம் என்ற கவலை இல்லை”, என்றார்.