தமிழ்ப்பள்ளிகள் குண்டர்களை உருவாக்குகின்றன என்ற அறிக்கைகள் சரியானவை அல்ல

 

Gangsterintamilschoolsதமிழ்ப்பள்ளிகள் குண்டர்களை உருவாக்கும் இடம் என்ற அறிக்கைகள் சரியானவை அல்ல, ஏனென்றால் அவை தவறான மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டவை என்று ஒரு சிவில் சமூக அமைப்பின் தலைவர்கள் கூறுகின்றனர்.

இவ்விவகாரம் சம்பந்தமாக விளக்கம் பெறுவதற்காக மைஸ்கில்ஸ் இயக்குநர் எஸ். பசுபதியை சந்தித்ததாகவும் அவர் “தமிழ்ப்பள்ளிகள் குண்டர்தனத்தின் பிறப்பிடம் என்று கூறவில்லை என்பதை எங்களால் உறுதிப்படுத்த இயலும்” என்று அக்குழுவினர் தெரிவித்தனர்.

“ஏழையான சமூக மற்றும் பொருளாதார பின்னணியைச் சார்ந்த சிறுவர்கள், அவர்கள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பது பொருட்டல்ல, இந்த குண்டர்தன புறத்தூண்டுதலால் வெகுவாக ஈர்க்கப்படுகின்றனர் என்று அவர் (பசுபதி) கூறினார்.

“அவர் கூறியது தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”, என்று அந்த சிவில் சமூகத் தலைவர்கள் ஒரு கூட்டறிக்கையில் இன்று கூறியுள்ளனர்.

அக்கூட்டறிக்கையில் எ. வைத்திலிங்கம் (சமூகத் தலைவர்); என். எஸ். இராஜேந்திரன், எம். முத்துசாமி மற்றும் எஸ். சுப்ரமணி (மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, பிரதமர் துறை); கா. ஆறுமுகம்(சமூக ஆர்வலர் ); மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் இன ஆய்வு கழகத்தைச் சேர்ந்த கே. எஸ். நாதன் மற்றும் டெனிசன் ஜெயசூரியா (கித்தா-யுகேஎம்). ஆகியோருடன் எஸ். பசுபதியும் (மைஸ்கில்ஸ் அறவாரியம்) கையொப்பமிட்டுள்ளனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நிலை ஏற்பட்டிருந்தால் அது வருத்தத்திற்குரியதாகும்”, என்று பசுபதி கூறினார்.

“நான் தமிழ்ப்பள்ளிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததே இல்லை அல்லது களங்கம் விளைவிக்க வேண்டும் என்று எண்ணியதே இல்லை. நான் அதைச் செய்யவே மாட்டேன்”, என்று அவ்வறிக்கையில் அவரை மேற்கோள் காட்டி கூறப்பட்டுள்ளது.

மலேசியாவிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் தேசிய பரம்பரைச் சொத்து என்பதையும் அது மலேசியத் தமிழ் சமூகத்தின் ஒரு மிக முக்கிய அங்கம் என்பதையும் அந்த சிவில் சமூகத் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

“இந்திய இளைஞர்களை பாதிக்கும் அடிப்படைக் காரணங்கள் மீது கவனம் செலுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுமாறு நாங்கள் சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

“சமூகமும் நாடும் மேம்பட்ட நிலையை அடைவதற்கான ஆற்றல் மிக்க தீர்வுகளின் மீது தொடந்து கவனம் செலுத்துவதற்காக அனைவரையும் முன்நோக்கிச் செல்லுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”, என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.