தங்கும் விடுதிகளுக்குச் சுற்றுப்பயணச் சேவைக் கட்டணம் விதிக்கும் பரிந்துரை அவசியமான ஒன்றுதான் என்று கூறிய சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், மலேசியாவை விளம்பரப்படுத்துவதற்குப் பணம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எண்ணெய், எரிவாயு மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்த வருமானம் குறைந்ததால் அமைச்சின் விளம்பரப் பட்ஜெட்டுக்கான ஒதுக்கீடும் குறைந்து விட்டது என்றாரவர்.
“அமைச்சரவை சுற்றுலா விளம்பரத்துக்குப் பணம் தேடுவது எப்படி என்று ஆலோசித்தது……ஒதுக்கீட்டில் துண்டு விழும் தொகையைச் சரிக்கட்டவே இது”, என நஸ்ரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அமைச்சரவையின் இப்பரிந்துரைக்கு வரவேற்பு இல்லை. அதனால் தங்கும்விடுதிகளின் கட்டணம் ரிம5-இலிருந்து ரிம30 வரை உயரலாம் என்று கூறப்படுகிறது.
சாபா சுற்றுலா அமைச்சர் மசிட் மஞ்சுன் இப்படி ஒரு கட்டணத்தை அமல்படுத்த இது சரியான நேரமல்ல என்று கருத்துத் தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்துள்ளது.
மற்றவர்களும் அது சுற்றுப்பயணத் தொழிலைப் பாதிக்கும் என்றே கூறியிருக்கிறார்கள்.