சா அலாம், ஐக்கோம் தமிழ்பள்ளியின் ஆசிரியர் இராமதாசு நேற்று காலமானார். அவர் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இராசாக் தமிழ்ப்பள்ளியில் ஒரு துடிப்புமிக்க ஆசிரியராக பணியாற்றிய அவர், எப்பொழுதுமே மாணவர்களின் புறப்பாட நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். அவருடைய புன்னகை ததும்பும் முகமும், ஆர்வத்துடன் உரையாடும் தன்மையும் தன்னை எப்பவும் விட்டு அகலாது என்கிறார் அப்பள்ளியின் வாரியத்தலைவராக இருந்த வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
“சைல்டு நிருவனத்தின் பல நிகழ்ச்சிகளை இராமதாசு நடத்தி இருக்கிறார். அவருடைய ஆழமான ஈடுபாடு எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். குழந்தைகளுடன் மிகவும் இலகுவாக பழகுவதும், சிறந்த வகையில் செயலாக்கம் காண நேரம் காலம் பார்காமல் உழைப்பதுலும், அவருக்கு நிகர் அவர்தான்’ என்கிறார் சைல்டு நிருவாகி திருமதி சாரதாதேவி.
இராமதாசு ஐக்கோம் பள்ளிக்கு மாற்றலாகி சென்ற போது அங்கு ஒரு பாலர்பள்ளி வேண்டும் என்பதில் வெகு மும்முரமாக செயல்பட்டார். எப்போதுமே பள்ளி அல்லது மாணவர் நலம் என்பதிலேயே தனது காலத்தை கழித்தவர். தனது மாணவர்கள் சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறை கொண்டவர். பள்ளியை தனது குடும்பமாக்கிய இராமதாசு, திருமணம் என்பதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்க மறுத்தவர்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரகங்கள் செயல் இழந்த நிலையிலும், உறுதியான மனத்திடத்துடன் செயலாற்றினார் என்கிறார்கள் இவரின் சக ஆசிரியர்கள். அன்மையில் சிலாங்கூர் மாநிலம் இவருக்கு பிஜேகே என்ற விருது வழங்கி சிறப்பித்தது.
இராமதாசு மறைவு, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஓர் இழப்பாகும் என்கிறார் ஆறுமுகம்.
இவரின் மறைவு பற்றி வாலிதாசன் புலனம் வழி பகிர்ந்து கொண்ட கண்ணீர் மல்கும் கவிதை:
*இராமதாசு….*
போய் வா என் நண்பா…
என்றுமே நீ சிறந்த மாணவன்
ஆசிரியர்களில் வித்தியாசமானவன்…
காலன் கடுப்பெடுத்தவன்!!
கலகலப்பிற்கு உனை அழைத்திட்டானோ?
அவனுக்குப் பல விசயங்கள் தெரியாது….
மறக்காமல் அவன்காதுக்குள் அவற்றைச் சொல்லிடு நீ!!
இனி, எங்கள் முகங்களில் இறுக்கமே குடிகொள்ளும்
இனித்துப் பேசிட நீயில்லையே!!
எங்கள் கண்களில் நீர்த்தேக்கம் நிலைகொள்ளும்,
நித்தம் நகைச்சுவை சொல்லிட நீயில்லையே!
ஆசிரியர் உலகில் சற்று இருள் சூழ்ந்திருக்கும் ஒளிகூட்டிட
ஈடில்லா வைரம்
நீயில்லையே!
இன்னும் பல இராமதாசுக்கள் உருவாகிட வழியில்லையே
உயிர்ப்பிக்க கற்பிக்க இனி நீயில்லையே…
கதறி அழும் மாணவருக்கு கைப்பிடித்து ஆறுதல் சொல்ல நீயில்லையே!
இது அனைத்தும் காலனுக்குத் தெரியவில்லையே
மறக்காமல் அவன்காதுக்குள் அவற்றைச் சொல்லிடு நீ!!
நோவுற்ற காலத்திலும் போதிப்பது என்கடமையென தாயிடமே வாதிட்டு பள்ளி வந்தாய்!! கடமை செய்தாய்!
சிறந்த ஆசிரியன் பட்டம்,
இளங்கலை பட்டம்,
புலவர் பட்டம், இதோ சில நாள்முன்பு PJK பட்டம்,
என பட்டாம்பூச்சியாய்
பறந்தவனே….
அமரர் பட்டம் பெறுவதிலும் உனக்கு அவசரம்தானோ?
இனி உன்போல் அரிதானவனை எங்கு காண்போம் என்ற கவலை உனக்கு கிஞ்சிற்றுமில்லாது போனதோ….?
போனவழியறிந்தால்
மீண்டு(ம்) வா தோழா!!
வரமுடியாவிடில்
பரவாவில்லை…
நீ சிற்பி…
நீ செதுக்கிய சிற்பங்கள்
நாளை உலகை ஆள்வதை உன்னிடம் சொல்ல நாங்கள்
ஒருநாள் அங்கு வருவோம்!!
மீண்டும் அன்று நாம் விண்ணகத்தைக் கலகலக்க வைப்போம்…
அதுவரை
போய் வா என் நண்பா!!!
வலியுடன்,
-வாலிதாசன்-
இராமதாசு யார் என்று எனக்கு தெரியாது– ஆனால் அவர் நம்மவர்களுக்கு ஆற்றிய பணி பாராட்ட பட வேண்டியது– நல்லவர்களுக்கு நாம் மரியாதை செய்வது தகும். அன்னாரின் மறைவு வருத்தப்பட வேண்டிய ஒன்று.
அருமை நண்பர் ஆசிரியர் இராமதாசு அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தை தந்துவிட்டது. நண்பரை பிரிந்து துயரத்தில் இருக்கும் நண்பர்கலுக்கும், அவர்தம் குடும்பத்தார்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள்
நல்லவர்களையும் திறமையானவர்கலையும் அவர்கள் மறைந்த பின்னர் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கு. அவர்கள் வாழும் நாளில் யாரும் கண்டு கொள்வதே இல்லை. இப்போதாவது அன்னாரைப் பற்றி எழுதியமைக்கு செம்பருத்திக்கு நன்றி..
இப்படியும் தமிழை நேசிக்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை அறியும்போது …மகிழ்ச்சியாக உள்ளது …தமிழுக்கும் அமுதென்று பேர் …..
இவரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்
நல்லவங்கெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட்டாங்க என்பதற்கு இவர் ஒரு உதாரணம்!!! நேரம் காலம் பாராது சமுதாயத்திற்கு உழைத்தவர்! தன்னுடலை கவனிக்க தவறிவிடடார்!!! ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
அன்னாரின் உயிர் சாந்தியடைய பிராத்திக்கிறோம். சிவ சிவ
அன்னாரின் பிரிவால் துயரத்தில் இருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாணவர்களுக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் .