சேவியர்: ஐஜிபி மலேசியத் தமிழர்களை விடுதலைப் புலிகளுடன் முடிச்சுப்போடுவது கண்டிக்கத் தக்கது


igpமலேசியத் தமிழர்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்திப் போலீஸ் படைத்தலைவர்  காலிட் அபு பாக்கார்  அறிக்கை விட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. தக்க ஆதாரம் இருந்திருந்தால் அப்படிப்பட்டவர்களைக் கைது செய்து நீண்ட நாட்களுக்கு முன்பே  நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

 

அப்படி நிருபிக்கத் தவறி விட்டு, இப்பொழுது நொண்டிச் சாக்கு சொல்பவர் அந்த பதவிக்கு சற்றும்  அருகதையற்றவர் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

இந்நாட்டுத் தமிழர்களின்  உணர்வுகளை அடக்க, போலீசாரின் அடக்குமுறைக்கு ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளவோ,  எதற்கெடுத்தாலும்  விடுதலைப்புலிகளுடன் தமிழர்களைத் தொடர்பு படுத்தும் ராஜபக்சேயின் காலாவதியான  யுக்திகளை அப்படியே பின்பற்றி, ராஜபக்சேக்குப்  பின்பாட்டு பாடுபவராக மலேசியப் போலீஸ் படைத் தலைவர் இருக்கக் கூடாது என்றார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

இந்நாட்டிலும், உலகின் எப்பாகத்திலும் எப்போதெல்லாம் இனப் படுகொலைகள் மற்றும் ,அரசாங்கங்களின் இனப் பாகுபாடான xavierகொள்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் மலேசியர்கள் தயங்காமல் குரல் கொடுப்பார்கள் என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

இந்நாடு முழுக்க  ஆங்கிலேயர்களின் பொருளாதார, பாதுகாப்பு ஆதிக்கத்தில் இருந்த காலத்திலேயே தென்ஆப்பிரிக்கா, ரொடீசியா போன்ற நாடுகளின் இனப் பாகுபாட்டை எதிர்த்துக் குரல் கொடுத்த தேசம் மலாயா என்பதை போலீஸ் படைத்தலைவர்  காலிட் அபு பாக்கார் தெரிந்து கொள்ளவேண்டும். ஆக,  அந்தப் பின்னணியில் வளர்ந்த மக்கள், இன்று  தங்கள்  அக்கம்பக்க நாடுகளில் இனப் படுகொலைகள் நடக்கும் போது கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது.

 

எப்போதெல்லாம் மலேசியத் தமிழர்கள்  அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்களோ அப்போதெல்லாம்  தமிழர்களை அடக்க, அவர்களுக்கு எதிராகத் தூக்கிப்போடும் பொறியாக, அல்லது மிரட்டும் ஆயுதமாக விடுதலைப் புலிகளை இங்குப் பயன்படுத்தக் கூடாது.

 

மலேசியத் தமிழர்கள் கடந்த நான்கு நாட்களாகச் செய்து வந்த ஆர்ப்பாட்டம் ராஜபக்சேக்கு எதிரானது. இலங்கையில் இன அழிப்பை மேற்கொண்ட கோரமான ஒரு கொடிய மிருகத்தின் செயலைக் கண்டித்து மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்தியர்கள்  தமிழர்கள் என்று பாகுப்பாடின்றி மனிதத்தன்மையை நேசிக்கும் எந்த மாந்தரும் கலந்துகொள்ளலாம்.

 

இந்த நாட்டின் குடிமக்கள் ஓர்  அன்னியனுக்கு, ஒரு கொடூர மிருகத்துக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால், இங்கு  வருகை புரிபவன் எப்படிப்பட்ட குற்றவாளியாக  இருப்பான் என்பதனைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டியதும், அரசாங்கத்துக்குத் தக்க ஆலோசனை வழங்க வேண்டியதும் போலீஸின் கடமை.

 

ஆனால், போலீஸ் சரியான  ஆலோசனையை அரசாங்கத்திற்கு வழங்கியதா என்பதை போலீஸ் படைத்தலைவர் தெளிவுபடுத்த வேண்டும். கே.எல்.ஐ.ஏ விமான  நிலையத்தில் நடந்த கைக் கலப்புக்கு இரண்டு தரப்பும் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழ் இளைஞர்களை மற்றும் பலிகடா  ஆக்கக்கூடாது என்றார் அவர்.

 

வாக்கு வாதம் முற்றியபின்பே அது கைகலப்பாக மாறியுள்ளது என்பதை போலீஸ் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளையில், இலங்கையைச் சார்ந்த மற்றவர்கள் தாக்கப்படவில்லை, இலங்கை தூதர் மட்டும் தாக்கப்பட்டதற்கு வாக்குவாதத்தின் போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சின மூட்டுவதாக அமைந்திருக்க வேண்டும்.

 

mahinda_rajapaksaஇது ஆத்திரமூட்டும் வார்த்தைகளால் ஏற்பட்ட ஒரு நோக்கமற்ற கைகலப்பு, அதனை ஏன் கடும் சோஸ்மா விதியின் கீழ் விசாரணை செய்ய வேண்டும். உண்மையான பயங்கரவாதிக்கு நாட்டில் சிகப்பு கம்பள வரவேற்பு. ஆனால் அதனை எதிர்க்கும் இளைஞர்களுக்கு கடுமையான பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனையா என்று கேட்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

இந்நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற, மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் போலீசார் என்பதை மறுஉறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் போலீசார் உள்ளனர். இந்திய இளைஞர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்பதை போலீஸ் படைத்தலைவர் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.