ஒரு வலைப்பதிவரான ராஜா பெட்ரா கமருடின், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் பேரரசருக்குமிடையிலான சந்திப்பின்போது நிகழ்ந்ததாகக் கூறியுள்ள அத்தனையும் அப்பட்டமான பொய் என அம்னோ பத்து கவான் தொகுதி முன்னாள் உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் சாடியுள்ளார்.
ராஜா பெட்ராவை “ஒரு பொய்யர்” எனக் குறிப்பிட்ட கைருடின், பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஸம் ஷாவைச் சந்திக்க மகாதிர் அலோர் ஸ்டார் அனாக் புக்கிட் அரண்மனை சென்றபோது தாமும் உடன் சென்றதாகவும் ஆனால், அச்சந்திப்பில் என்ன நிகழ்ந்தது என்பது தனக்குக் கூட தெரியாது என்றும் கூறினார்.
ராஜா பெட்ரா தம் வலைப்பதிவில் அச்சந்திப்பில் பேசப்பட்டதை விலாவாரியாக வெளியிட்டிருந்தார்.
மகாதிர் கொண்டு சென்ற குடிமக்கள் பிரகடனத்தில் உள்ள கையெழுத்துகள் உண்மையானவைதான் என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா எனப் பேரரசர் வினவியதாகவும் அதற்கு மகாதிரால் பதிலளிக்க முடியவில்லை என்றும் அவ்வலைப்பதிவர் குறிப்பிட்டிருந்தார்.
“அதை மகாதிர் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியடைந்து சில நிமிடங்கள் பேச்சிழந்து அமர்ந்திருந்தார்.
“சிறு இடைவெளிக்குப் பின்னர், தம்மிடம் கொடுக்கப்பட்டதைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்.
“உத்தரவாதமில்லை என்பதைத்தான் மகாதிர் அப்படிக் கூறினார். கையொப்பங்களைச் சேகரித்தது தாம் அல்ல என்றும் மற்றவர்கள்தான் அதைச் செய்தார்கள். அவர்கள் கொடுத்ததைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்.
“மகாதிரின் மறுமொழி நம்பத்தக்கதாக இல்லை. அவரால் எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை.
“பேரரசர் மகாதிரையே பார்த்தார். மகாதிர் தலை குனிந்தார். அதன் பிறகு குடிமக்கள் பிரகடனம் குறித்தோ 1.4 மில்லியன் கையெழுத்துகள் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை”, என ராஜா பெட்ரா தம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அச்சந்திப்பின்போது மூன்றாம் தரப்பாக எவரும் இல்லாத நிலையில் ராஜா பெட்ரா தனிப்பட்ட அச்சந்திப்பு குறித்து விரிவாக அறிந்து வைத்திருப்பது
நம்ப முடியாதது என கைருடின் சாடினார்.
“அச்சந்திப்பு பேரரசருக்கும் மகாதிருக்குமிடையில் மட்டுமே நிகழ்ந்தது.
“நானும் மகாதிருடன் அனாக் புக்கிட் அரண்மனைக்குச் சென்றேன். ஆனால், பேரரசரும் மகாதிரும் என்ன பேசினார்கள் என்பது எனக்கே தெரியாது. மற்றவர்களும் அதை அறிய மாட்டார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்”, என்றார்.
அப்படியிருக்க, பிரிட்டனில் வாழும் இந்த ‘ராஜா பெட்ரா என்ற பொய்யர்’ பேரரசருக்கும் மகாதிருக்குமிடையில் நிகழ்ந்த உரையாடலின் ஒவ்வொரு சொல்லும் தமக்குத் தெரியும் என்று கூறிக்கொள்வதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது என கைருடின் கூறினார்.