தேர்தல் தொகுதித் திருத்தங்கள்மீது பிஎன்/அம்னோ சிறப்பு கூட்டங்கள்

adnanஅம்னோவும்   பிஎன்னும்    தேர்தல்   ஆணையம் (இசி)   முன்மொழிந்துள்ள    தேர்தல்   தொகுதிச்  சீரமைப்புப்   பரிந்துரைகள்  குறித்து     விவாதிக்க   செப்டம்பர்   23-இலும்,  30-இலும்   சிறப்புக்   கூட்டங்களை    நடத்தும்   என    பிஎன்   தலைமைச்   செயலாளர்    தெங்கு    அட்னான்   தெங்கு   மன்சூர்    கூறினார்.

அக்கூட்டங்களில்    எடுக்கப்படும்   முடிவு     இசி-க்குத்    தெரிவிக்கப்படும்    என்றாரவர்.

“தொகுதிகளின்   எண்ணிக்கையும்    தேர்தல்  தொகுதிகளின்   எல்லைகளும்   அரசாங்கம்    வெற்றிபெறக்கூடிய      இடங்களை     உறுதிப்படுத்தும்    என்பதால்   அந்நடவடிக்கை   எங்களைப்   பாதிக்கும்.  எல்லாக்  கட்சிகளுமே    அதில்    அக்கறை   காட்ட    வேண்டும்”,  என்றவர்   சொன்னதாக   ஓரியண்டல்   டெய்லி   கூறிற்று.
கட்சி    அதன்   தேர்தல்   இயந்திரத்தை   ஒன்றுதிரட்டி    அதன்   கிளைகளையும்    தொகுதிகளையும்   கொண்டு    வாக்காளர்   பட்டியலை   ஆராய   வேண்டும்    என்று   அம்னோ    தலைமைச்   செயலாளருமான   தெங்கு    அட்னான்   தெரிவித்தார்.

ஒருவேளை   தேர்தல்   முன்கூட்டி    நடத்தப்பட்டால்    அதற்கு   ஆயத்தமாக  இருக்க   அது   உதவும்    என்றாரவர்.

இதனிடையே,  பிஎன்   உறுப்புக்  கட்சிகளான    மசீசவும்   கெராக்கானும்   இசி-இன்     தேர்தல்   தொகுதிச்  சீரமைப்புப்  பரிந்துரைகளுக்கு   எதிர்ப்புத்    தெரிவித்துள்ளன.

வாக்காளர்களை   அவர்களின்  இனத்தை   வைத்து   வெவ்வேறு  தொகுதிகளுக்குக்  கொண்டு  சென்றிருப்பது   சமூகங்களிடையிலான  பிளவை   மேலும்   மோசமாக்கும்    என  மசீச   தலைவர்   லியோ    தியோங்   லாய்    கூறினார்.

“இதனால்   பாதிக்கப்படும்   மசீச   தொகுதிகளிடம்    அறிக்கை   சமர்ப்பிக்குமாறு    பணித்திருக்கிறேன்.   இதை  வைத்து   கட்சி   நிலவரத்தை   ஆராயும்”,  என்றார்.
கெராக்கான்   தலைவர்    மா   சியு   கியோங்,   உத்தேச   தேர்தல்  தொகுதிச்  சீரமைப்பு    கட்சியின்   45   நாடாளுமன்ற,   சட்டமன்ற   இடங்களிலும்   வெற்றி   வாய்ப்பைப்   பாதிக்கும்    என்றார்.

தெலுக்  இந்தான்,  புருவாஸ்,    தைப்பிங்  உள்பட    அக்கட்சி      பாரம்பரியமாக    போட்டியிட்டு   வரும்   இடங்கள்   பல  மாற்றங்களுக்கு  இலக்காகியுள்ளன.   அந்த  இடங்களில்     கட்சி    அடிநிலை   உறுப்பினர்கள்   கடுமையாக    பாடுபட்டு   வந்திருக்கிறார்கள்.

பொதுத்   தேர்தலில்    அவையெல்லாம்   கெராக்கான்   வெற்றிபெற   வாய்ப்புள்ள   இடங்களாக    அடையாளம்    காணப்பட்டிருப்பவை   என்றாரவர்.

தேர்தல்   தொகுதி  எல்லைச்   சீரமைப்புக்கு    எதிர்ப்புத்    தெரிவிக்க     கெராக்கான்   அந்தந்த   தொகுதிகளில்     100  பேரைத்   திரட்டி     வைத்திருப்பதாகவும்   அவர்   சொன்னார்.