போலீஸ் நடத்திய அதிரடி துப்பாக்கி தாக்குதலில் பலியான ஐவருக்கு நீதி வேண்டும்

ganesanஆகஸ்ட் 13, 2013 இல் அதிகாலை  பினாங்கு, செஞ்சுரி  கார்டன் அடுக்குமாடி வீட்டில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் பலியான 5 இளைஞர்களுக்கு   நீதி கோரி  பினாங்கு உயர்நீதி மன்றத்தில் ஆகஸ்ட் 18, 2016 இல் வழக்கு ஒன்று   பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் மன்ற உறுப்பினர் என். கணேசன் தெரிவித்தார்.

இதில் கோபி த/பெ ஜெயாசூர்யம், சுரேஷ் த/பெ முருகேசன், ரமேஷ் த/பெ ரங்கநாதன், ராகன் த/பெ நாகையா மற்றும்  கோபிநாத் த/பெ மயில்வாகனம் ஆகியோர்  தாக்குதல் நடந்த இடத்திலே உயிர் நீத்தனர். இவ்வழக்கில் எதிர்தரப்பினராக  மலேசியா அரசாங்கம் மற்றும் 3 காவல்துறை உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் முஹமட் நைம் பின் அஸ்னவி,  பினாங்கு காவல் துறை தலைமையகம்,   அப்துல் ரஹீம் ஹனாபி, பினாங்கு மாநில தலைமை அதிகாரி மற்றும் காலிட் பின் அபு பக்கர்,  மலேசியா காவல் துறை  தலைமை அதிகாரி,  ஆகியோராவர்.

இந்த சம்பவத்தை பற்றி  காவல் துறையினர் கொடுத்த செய்திகளையே தகவல் ஊடகங்கள்  வெளியிட்டனர். இத்துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  குடும்ப  உறுப்பினர்கள்  நாட்டின்  நீதி துறையிடம்   இந்த அநீதிக்கு இவ்வழக்கின் மூலம் நீதி கேட்கின்றனர்.

Hindraf People's Movement Logo     மேலும்,  காவல்துறையின்  இந்த அதிரடி துப்பாக்கி தாக்குதல் செயல்  நம் நாட்டின் சட்ட ஒழுங்குகளுக்கு உட்பட்டும்  மனித உரிமைகளுக்கு  உட்பட்டும் நடந்ததா என்று அவர்கள் கேள்வி  எழுப்பியுள்ளனர்.  இவ்வழக்கில் வழங்கப்படும் நியாமான தீர்ப்பு இனி  நாட்டின்  சட்டதிட்டங்களும்  ஆயுத படையின் பயன்பாடும் நியமாக செயல்படும்   என்று  பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த வழக்கில்  பாதிக்கப்பட்ட குடும்பங்களைப்  பிரதிநிதித்து  வி.பார்த்திபன், பார்த்திபன் & கோ, சட்டக் குழுவிற்கு தலைமை ஏற்றுள்ளார். மேலும்,   புவனேஸ்வரன் மற்றும் கே. குமரன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  இவர்களோடு இந்த வழக்கில் நாட்டின் மனித உரிமை காவலர்களான சுவாராம் மற்றும் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கமும்  இவர்களுக்கு உறுதுணையாக உள்ளனர்.

இவ்வழக்கின் தீர்ப்பு  நம் நாட்டின் மனித உரிமைகள் காக்கப்படுவதற்கும் தரம் மேம்பாடு அடைவதற்கும் வழிகோலும்  என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறிய கணேசன், நாட்டின் சட்ட ஒழுங்குகளை அமுல்படுத்தும் அதிகாரத்தை கொண்டுள்ளவர்கள்  சட்டப்படி நடந்துகொள்ள  இவ்வழக்கு வழிவகுக்கும்  என்றார்.