சித்திக்கைக் கைது செய்ய கைதாணை தேவையில்லையா? ஐஜிபிக்கு வழக்குரைஞர்கள் மறுதலிப்பு

polisதொடர்பு,  பல்லூடகச்   சட்டத்தை    மீறியதாகக்  கூறப்படும்   முன்னாள்   செய்தியாளர்   சித்திக்   கமிசோ-வைக்  கைது    செய்ய   கைதாணை   தேவையில்லை   என்று   போலீஸ்   படைத்    தலைவர்    காலிட்   அபு   பக்கார்  கூறியது    தவறு   என்று  வழக்குரைஞர்கள்   குறிப்பிட்டார்கள்.

“தொடர்பு,  பல்லூடகச்   சட்டம்   பகுதி   258.  ஒருவரைக்  கைது   செய்ய   கைதாணை   அவசியம்    என்பதைத்   தெள்ளத்   தெளிவாக   வலியுறுத்துகிறது”,  என   வழக்குரைஞர்   எண்டி    யோங்      மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

சித்திக்கின்   வழக்குரைஞர்    சித்தி    காசிமும்   இதேபோன்ற  கருத்தை    அவரது   முகநூல்   பக்கத்தில்    பதிவிட்டிருக்கிறார்.

நேற்று   ஓர்     அறிக்கையில்    கைதாணை      தேவையில்லை     என்று    கூறிய     நுண்மான்  நுழைபுலம்   படைத்த  ஐஜிபி     அவர்கள்
1998   தொடர்பு,  பல்லூடகச்   சட்டத்தின்  258வது  பகுதியைத்   தயை   செய்து   விளக்க    வேண்டும்    என்றவர்   கேட்டுக்கொண்டார்.

பகுதி   258, விசாரணை    முடிந்ததும்   மலேசிய     தொடர்பு,   பல்லூடக  ஆணைய   அதிகாரி   தான்   சேகரித்த    தகவல்களை    போலீசிடம்   ஒப்படைக்க   வேண்டும்   எனக்   கூறுகிறது.

“அதன்  பின்னர்   போலீஸ்   அதிகாரி    கைதாணையைக்   கொண்டு  அச்சட்டப்படி   அல்லது    அதன்    துணைச்    சட்டப்படி    குற்றமிழைத்த   நபரைக்   கைது     செய்யலாம்”,  என   அப்பகுதி   குறிப்பிடுகிறது   என்றாரவர்.

சித்திக்  “இஸ்லாத்தை   அவமதித்து”   டிவிட்டரில்    பதிவிட்டிருந்தார்  என்ற    குற்றச்சாட்டின்பேரில்   திங்கள்கிழமை    அதிகாலை    அவரது  வீட்டில்   கைது   செய்யப்பட்டார்.