இதோ பேராக்கின் ஏழைகள்: அமனா வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறது

perakகஜானா  ஆராய்ச்சிக்  கழகம் (கேஆர்ஐ)   ஆய்வு   நடத்தி    பேராக்கில்    வறுமை  நிலவுவதாகக்   கூறியிருப்பதை   எக்காரணம்    கொண்டும்   மாநில    அரசு    மறுக்கவியலாது   என    பார்டி   அமனா   நெகாரா   கூறியது.

பேராக்    அமனா   துணைத்     தலைவர்      ஹஸ்னுல்    சுல்கர்னைன்,      லாருட்   தொகுதியில்    மட்டும்     “மிகவும்  ஏழ்மைநிலைமையில்” உள்ள  பலர்    இருப்பது    தெரிய   வந்ததாகக்   கூறினார்.

“மின்சாரமோ     குழாய்  நீரோ  இல்லாத   வீடுகள்   இன்னும்   இருக்கின்றன. தண்ணீருக்குக்     கிணறுகள்   அல்லது   ஆறுகளைத்தான்    நம்பியிருக்கிறார்கள்.

“மெழுகுதிரியின்   மங்கலான   வெளிச்சம்தான்   துணை.  மற்றபடி  இருளில்தான்   வாழ்கிறார்கள்”,  என்றாரவர்.
கேஆர்ஐ   ஆகஸ்ட்    29-இல்   வெளியிட்டிருந்த    அறிக்கையில்,   பேராக்கில்   உள்ள   குடும்பங்களில்  81.1  விழுக்காடு    ரிம6,000-க்கும்    குறைவாக     மாத   வருமானம்  பெறும்  குடும்பங்கள்    என்று  கூறியிருந்தது.    அதேவேளை      ரிம2,000-த்துக்கும்   குறைவாக  மாதம்   பெறுவோரை    அதிகம்   கொண்டுள்ள   இரண்டாவது   பெரிய   மாநிலமும்   அதுதான்   என்று   அது   குறிப்பிட்டிருந்தது.

பேராக்கை  ஏழை மாநிலம்   என்று    கேஆர்ஐ  வகைப்படுத்தியதை     பேராக்    மந்திரி  புசார்    ஜம்ரி    அப்துல்   காடிரால்   ஏற்க  முடியவில்லை.

“கேஆர்ஐ  அறிக்கை     பேராக்கைப்     பற்றி   நல்லவிதமாகச்  சித்திரித்துக்    காட்டவில்லை.  நாம்   கிளந்தான்போல்    ஏழ்மை  நிலையில்  இருப்பதுபோல்   காண்பித்துள்ளது.   பேராக்கை  ஓர்   ஏழை   மாநிலம்  என்றுரைப்பது    தவறு”,  என்றவர்   சொன்னதாக    அஸ்ட்ரோ   அவானி   கூறிற்று.

ஹஸ்னுல்    நேற்று   விடுத்த    அறிக்கையில்  அமனா   இளைஞர்   பகுதியினர்,    10  குடும்பங்களைச்   சென்று   கண்டதாகவும்   அவர்களின்   நிலை   கண்டு  வருந்தியதாகவும்    கூறினார்.

“அக்குடும்பங்களின்   மாத    வருமானம்   ரிம800-க்கும்   குறைவு.  அடிப்படைத்   தேவைகளுக்கே   அது   போதாது.  பிறகு   எப்படி   நவீன   வாழ்க்கை  வாழ்வது”,  என  ஹஸ்னுல்   வினவினார்.

ஜம்ரி  மறுப்பதால்    எதுவும்   ஆகப்   போவதில்லை.

“பிரச்சாரம்    செய்தது   போதும்.  மாநிலத்தை    நேர்மையாக    ஆட்சி   செய்யுங்கள்”,  என்று  ஹஸ்னுல்   கேட்டுக்கொண்டார்