தோட்டப்புறங்களின் வறுமை தொடர்கிறது, நம்பிக்கையற்ற வாழ்க்கையில் அதிக இந்தியர்கள்! – கா. ஆறுமுகம்

muhammad2மலேசியர்களின் வளர்ச்சியை நாட்டின் மேம்பாட்டோடு ஒப்பீடு செய்யும் போது வறுமை நிலையில் உள்ளவர்களின் வளர்ச்சி கணிசமாக மாற்றம் கண்டுள்ளது. ஆனால், அதை நுண்ணியமாக பார்க்கையில் தோட்டப்புற மக்களின் வளர்ச்சி பின்னடைவில்தான் உள்ளது என்கிறது இவ்வாண்டின் ஒரு புதிய ஆய்வு.

கஜானா ஆய்வு  நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட ஒரு துள்ளித ஆய்வின் வழி கண்டுபிடித்த தகவல்களை ஒரு கருத்துக் கணிப்பிற்காக அதன் ஆய்வாளர் முனைவர் முகமாட் அப்துல் காலிட் பகிர்ந்து கொண்டார். அதன் முழுமையான விபரங்கள் கூடிய விரைவில் புத்தக வடிவமாக வெளிவரும் என்பதால், தான் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அதில் கூறப்பட்ட இரண்டை மட்டும் மேலோட்டமாக பகிர்ந்து கொள்கிறேன். முழுமையான விபரங்கள் புத்தகம் வெளியீடு கண்ட பிறகு பகிர்ந்து கொள்ளப்படும்.

inequalityஇதற்கு முன்பு முகமாட் அவர்கள், வருமான வேறுபாடுகள் பற்றிய தனது முனைவர் பட்டதிற்கான ஆய்வைப் புத்தக வடிவில் ‘சமத்துவமின்மையின் நிறங்கள்’ (The Colours of Inequality) என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் இந்தியர்கள்தான் மிகவும் மோசமான வருமான வேறுபாட்டிலும் கீழ்மட்ட 40 சதவிகிதத்தினர் மற்ற இனங்களை விடப் பொருளாதார உடமையில் குறைவாக இருப்பதாகப் புள்ளி விபரங்கங்களுடன் வெளியிட்டார்.

நேற்று பெட்டாலிங்ஜெயாவில் உள்ள ஒரு கல்லூரியில் முனைவர் டெனிசன் ஏற்பாடு செய்திருந்த அந்த ஆய்வு கலந்துரையாடலில் முனைவர் தான்சிறி மாரிமுத்து, டத்தோ வைத்தலிங்கம், முனைவர் நடராஜா, முனைவர் நாதன், பசுபதி, செல்வமலர் உட்பட மேலும் சில அழைக்கப்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் புதிய ஆய்வு வெளிக்கொணரும் இன்னொரு கருத்து சற்று அதிர்சியை அளிக்கும் வகையில் இருந்தது. கீழ்மட்ட 40 சதவிகித இந்தியர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்பதில் நம்பிக்கையற்று இருக்கின்றனர் என்பதாகும். இது மற்ற இனங்களைவிட அதிகமாக இருக்கிறது.

இந்தியர்கள் சார்புடைய ஆய்வுகளில், முகமாட் அவர்களின் ஆய்வுகள் சில வெளிப்படையான நமது யூகங்களை புள்ளிவிபரங்கள் வழி உறுதிபடுத்துகின்றன. இந்த நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டு நமது நாட்டின் கொள்கை அமைப்பில் மாற்றம் கொண்டு வர இந்த ஆய்வு பயன் படுத்தப்பட வேண்டும் என கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.